`நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் சிறகை’ என்ற திரைப்படப் பாடல் எழுபதுகளின் இறுதியில் எங்கும் ஒலித்துக்கொண்டிருந்த காலகட்டம், இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது. இசை என்றால் சினிமாப் பாடல்கள்தான் என்ற பிரமை சராசரித் தமிழர் மனங்களில் இன்றளவும் ஆழமாகப் பதிந்துள்ளது.
வெள்ளித்திரையில் ஒளிர்கின்ற திரைப்படத்தில் செயற்கையான பூக்கள் ஜொலிக்கிற அரங்கினில் சுற்றி வந்து காதலனும் காதலியும் உணர்ச்சிபூர்வமாகப் பாடிய பாடல்கள், பார்வையாளர்களுக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தின.
‘அச்சம் என்பது மடமையடா’ என ஒலித்த திரையிசைப் பாடலின் வரிகளுக்கு வாயை அசைத்தவாறு சாரட் வண்டியில் எம்.ஜி.ஆர். திரையில் தோன்றியபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பாடலின் வரிகள் இசையோடு கலந்து காற்றில் பரவும்போது ஏற்படுகிற கொண்டாட்டத்தை ஒருபோதும் மொழியினால் விவரிக்க இயலாது. ’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று எம்.ஜி.ஆர் பாடியவாறு கையில் சவுக்கைச் சுழற்றுகிற காட்சிக்காக ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தைச் சிலர் மீண்டும் மீண்டும் பார்த்தனர். எழுபதுகளில் பாடல்களால் நிரம்பி வழிந்த பாடல்களின் காட்சிகளைத் திரையில் காண்பதற்காகத் திரையரங்குகள் முன்னர் பலர் காத்துக் கிடந்தனர்.
தமிழில் ஏதோவொரு கதையைக் காட்சிகளாகக் காட்சிப்படுத்துகிற திரைமொழியில் பாடல்கள் இடம்பெற்றது, ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட நாடகங்களின் தொடர்ச்சிதான். புராண, இதிகாசப் படங்களில் ஐம்பது பாடல்கள்கூட இடம் பெற்றன. இசையுடன் ஒலிக்கிற பாடல்கள், திரைப்படத்தின் கதையாடலுடன் இசைந்திடும்போது பார்வையாளர்களுக்கு இன்றளவும் உற்சாகம் பீறிடுகிறது. ’ஹரிதாஸ்’ திரைப்படத்தில் தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றை மீண்டும் மீண்டும் கேட்பதற்காகக் கூடியவர்களால் அந்தத் திரைப்படம் மதுரை சிந்தாமணி தியேட்டரில் மூன்று தீபாவளிகளைக் கண்டது.
பாகவதர் ’மன்மத லீலையை வென்றார் உண்டோ’ எனப் பாடியபோது, அதைக் கேட்டுக் கிறங்கியவர்கள், சொக்கிப்போய் வேறு உலகினுள் பயணித்தனர். குறிப்பாகக் காதல் பாடல்கள், சோகப் பாடல்கள் இசையின் வழியாகக் கேட்பவர்களின் மனங்களில் நுழைந்து, காற்றில் மிதந்திடும் நிலையை உருவாக்கின. எண்பதுகளில் இளையராஜாவின் இசையில் வெளியான ’பயணங்கள் முடிவதில்லை’ தொடங்கி பல படங்கள் பாடல்களுக்காகவே நூறு நாள்கள் ஓடின.
அறுபதுகளில் கையால் சுற்றப்படுகிற கிராமபோன் கருவியில் சுழன்றிடும் கெட்டியான இசைத்தட்டு, நீளமான கூம்புக்குழாயின் வழியாகப் பாடல் வடிவில் மதுரை நகரத்து வெளியில் பரவியது. கோவில் திருவிழா, அரசியல் கட்சிகளின் கூட்டம் போன்ற பொது நிகழ்வுகளிலும் கல்யாணம், காதுகுத்து, சடங்கு நடைபெறுகிற வீடுகளிலும் மைக்செட் அத்தியாவசியமானது. கனமான இசைத்தட்டு சுழலும்போது, அதன்மீது சிறிய உலோக முள் உரசியதால் ஏற்படும் அதிர்வுகள் டிரான்ஸ்பார்மர் மூலம் ஒயரின் வழியாக குழாய்க்குச் செல்லும்போது, காற்றில் பாடல் ஒலித்திடும். அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் ’அழகென்ற சொல்லுக்கு முருகா’ எனத் தொடங்கும் டி.எம்.சௌந்தரராஜனின் கனமான ஒலியினால் வட்டாரமே விழித்துவிடும். அதைத் தொடர்ந்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது, சாமி பாட்டுகள் ஒலிக்கும். அப்புறம் திரைப்படப் பாடல்கள். மதிய நேரம் திரைப்பட வசனம் ஒலிபரப்பாகும்.
திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், சரஸ்வதி சபதம், உரிமைக்குரல் போன்ற திரைப்படங்களின் வசனங்கள் ஒளிபரப்பப்படுவதை எங்கோ இருந்து கேட்பவரின் மனதில் ஏற்படுத்தும் மனப்பதிவுகள் முக்கியமானவை. எனக்குத் தெரிந்து ’விதி’ திரைப்படத்தின் வசனம்கூட விசேஷ வீடுகளில் ஒலித்தது. வீட்டில் விழாவை நடத்துகிறவர் எந்தக் கட்சியைச் சார்ந்தவர் என்பதற்கேற்பப் பாடல்களும் ஒலிச்சித்திரங்களும் ஓலிபரப்பாகும். அந்தக் காலத்தில் தி.மு.க. – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியதால், எம்.ஜி.ஆர்- சிவாஜி நடித்த படங்களின் பாடல்களும் வசனங்களும் முக்கியமானவையாகக் கருதப்பட்டன. மாலையில் நடைபெறவிருக்கிற அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குக் காலையில் இருந்தே பாடல்கள் ஒலிபரப்பாகும். சுற்று வட்டாரத்தில் வசிக்கிறவர்களுக்குத் தொடர்ந்து பாடல்கள் ஒலிப்பது பெரிய தொந்தரவாக இருக்கும். குறிப்பாகத் தேர்வுகளுக்குப் படிக்கிற மாணவமாணவியரும் குழந்தைகளும் முதியவர்களும் கூம்பு ஒலிபெருக்கியில் ஒலித்த திரைப்பாடல்களால் பெரிதும் சிரமப்பட்டனர்.
அன்றைய காலகட்டத்தில் பெரிய வால்வுகள் இருந்த ரேடியோ என்பது ஓரளவு வசதியானவர்களின் வீடுகளில்தான் இருந்தன. பெரிய உணவகங்களிலும் தேநீர்க் கடைகளிலும் ரேடியோ பெட்டி பாடுவதைக் கேட்பதற்கு எப்பவும் ஒரு கூட்டம் காத்திருக்கும். அதற்குப் பின்னர் வந்த டிரான்சிஸ்டர் வெகுமக்கள் வாங்குகிற விலையில் கிடைத்தவுடன், ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும்போதும் டிரான்சிஸ்டரில் பாட்டுக் கேட்பது நடைபெற்றது. சென்னை வானொலியின் விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, விளம்பரங்களுடன் திரையிசைப் பாடல்களுக்கு முக்கியத்துவம் தந்தது. சென்னை வானொலி நிலையம் ஞாயிற்றுக்கிழமைதோறும் புதுப்படப் பாடல்களும் செவ்வாய்க்கிழமையன்று இரவில் ’இரவின் மடியில்’ நிகழ்ச்சியில் பழைய திரைப்படப் பாடல்களும் ஒலிபரப்பியதை மக்கள் உற்சாகத்துடன் கேட்டனர். ஒலிச்சித்திரம் என்ற பெயரில் ஒலிபரப்பான சினிமாவும் பெரிதும் கவனம் பெற்றது.
தமிழகத்தில் தமிழர்களின் இசை ரசனையை உருவாக்கியதில் சிலோன் ரேடியோவின் பங்கு தனித்துவமானது. இளம்பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால், பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, வீட்டில் திருமணத்திற்காகக் காத்திருந்தனர். அவர்களின் பொழுதுபோக்கு அம்சமாக சிலோன் வானொலி ஒலிபரப்பிய திரைப்படப் பாடல்கள் விளங்கின. தமிழ்த் திரைப்படப் பாடல்களை முவைத்துப் பல்வேறு வழிகளில் நிகழ்ச்சிகளை உருவாக்கிய சிலோன் வானொலி நிலையம் எண்பதுகள் வரையிலும் தென் தமிழகத்தில் சிறப்பான இடம் வகித்தது. ஏ.எம். ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், மயில்வாகனம் சண்முகானந்தா போன்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்குத் தமிழகத்தில் பரவலாக ரசிகர்கள் இருந்தனர். திரையிசைப் பாடல்களின் புனைவியல் அம்சங்களைச் சுவராசியமாகச் சொன்ன அன்பு அறிவிப்பாளர்களின் குரல்கள் முக்கியமானவை.
திருவிழா உள்ளிட்ட முக்கியமான சிறப்பான நிகழ்வுகளில் பாட்டுக் கச்சேரி வைப்பது எழுபதுகளில் பிரபலமானது. மதுரையில் ஆர்க்கெஸ்ட்ரா எனப்படுகிற குழுவினர் இசைக்கருவிகளை இசைத்திட பாடகர்கள் திரையிசைப் பாடல்களைப் பாடுவதைக் கேட்பதற்கு மக்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். திண்டுக்கல் அங்கிங்கு, மதுரை சங்கீதா, ரெட்ரோஸ் போன்ற குழுவினரின் கச்சேரிகள் திருவிழாக்களில் ஒலித்தன.
எழுபதுகளில் தமிழ்த் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கிற இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. ஆங்கில, இந்திப் படங்கள் மதுரையில் பிரபலமடைந்தன. யாதோங்கி பாரத், ஷோலே, பாபி, ஆக்லே லக்ஜா, சோட்டி சி பாத் போன்ற இந்திப் படங்களும், புரூஸ்லீயின் எண்டர் தி டிராகன், சீன் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் படங்கள், மெகனான்ஸ் கோல்டு, டென் கமான்மெண்ட்ஸ் போன்ற செவ்வியல் ஆங்கிலப் திரைப்படங்களும் மாதக்கணக்கில் தியேட்டர்களில் திரையிடப்பட்டன; நூறு நாள்களை எளிதில் கடந்தன.
’பாபி’ படத்திற்கும் ’எண்டர் தி டிராகன்’ படத்திற்கும் ஐந்தாறு தடவை திரையரங்குகளுக்குச் சென்று டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களில் நானும் ஒருவன். சிவாஜியின் அன்பே ஆருயிரே, டாக்டர் சிவா; எம்.ஜி.ஆரின் நீதிக்குத் தலை வணங்கு, நாளை நமதே போன்ற படங்கள் ரசிகர்களைக் கவரவில்லை. அறுபது வயதான நடிகர்களின் தோற்றமும், காதல் டூயட்களும் செயற்கையான கதையமைப்பும் ரசிகர்களுக்கு எரிச்சல் அளித்தன.
இந்தித் திரைப்படங்களின் பாடல்கள் மதுரை நகரெங்கும் ஒலித்தன. கல்லூரி மாணவர்கள் பிரபலமான இந்தி, ஆங்கிலப் படங்களைப் பாடல்களுக்காக மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்தனர். கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் கிட்டார், புல்புல் தாரா போன்ற இசைக் கருவிகளில் ‘சுராலியே’, ’தம் மாரோ தம்’ என்று இந்திப் பாடல்களை வாசித்தனர். அன்றைய காலகட்டத்தில் சகிக்க முடியாதவாறு வெளியான தமிழ் சினிமாகள் பார்வையாளர்களால் புறக்கணிக்கப்பட்டன. தமிழ் சினிமாவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது என்று தோன்றியது.
எழுபதுகள் காலகட்டத்தில் திருவிழாக்களில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரிகளில் இந்திப் பாடல்கள் கணிசமான இடத்தைப் பிடித்தன. பாபி, ஷோலே, குர்பானி போன்ற இந்தித் திரைப்படங்களின் பாடல்கள் பெரும்பாலான இசைக்கச்சேரிகளில் பாடப்பட்டபோது, இளைஞர்கள் உற்சாகத்துடன் கேட்டனர். ரூப்பு தேரா மஸ்தானா, யாதோங்கி பாரத் போன்ற இந்தித் திரையிசைப் பாடல் வரிகளை இளைஞர்கள் எப்போதும் முணுமுணுத்தனர். அன்றைய காலகட்டத்தில் வெளியான தமிழ்த் திரையிசைப் பாடல்கள் மொக்கையாக இருந்தன. இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் களத்தில் இருந்தாலும், இந்திப் பாடல்கள் பிரபலமடைவதைத் தடுக்க முடியவில்லை. தமிழ்த் திரைப்படப் பாடல் என்றால் அறுவை என்ற சூழல் எங்கும் பரவலாக இருந்தது.
திடீரென ஒலித்த ’மச்சானைப் பார்த்தீங்களா’ என்ற ஜானகியின் குரலினால் ஒட்டுமொத்தத் தமிழர்களும் திரும்பிப் பார்த்தனர். அன்னக்கிளி, கவிக்குயில், 16 வயதினிலே, ஜானி என இளையராஜா இசையமைத்த பாடல்கள், தமிழர்களின் ரசனையை மாற்றியமைத்தன; தமிழகத்தின் இசைப் பாடல்களின் போக்கினை மாறியமைத்ததன. இளையராஜாவின் இசைப் பயணம், இளைஞர்களின் ஏக்கத்தையும் தேடுதலையும் புதிய மொழியில் சொன்னது. மேடைக் கச்சேரிகளில் தமிழுக்குக் கிடைத்த முக்கியத்துவம் ஒருபுறம் எனில் அதுவரை கொடி கட்டிப் பறந்த இந்தித் திரையிசைப் பாடல்கள் காணாமல்போனது இன்னொருபுறம் நிகழ்ந்தது. நகரங்கள்தோறும் புதிதாக உருவான ஆர்க்கெஸ்டரா குழுக்கள் தமிழகமெங்கும் இளையராஜா இசையமைத்த காதல், மெலோடி, சோகம், குத்துப்பாட்டு என இசையோடு பயணித்தனர். அன்றைய காலகட்டத்தில் சில பாடகர்கள் உடலை அசைத்தவாறு பாடியது பெரும் வரவேற்பு பெற்றது. அழகான பெண் பாடகி திரையிசைப் பாடலைப் பாடும்போது, ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்கவும் பார்க்கவும் செய்தனர். அந்த வகையில் இளையராஜா ஒப்பீடு அற்ற சாதனையாளர்.
எழுபதுகளில் டேப் ரெக்கார்டர் என்ற கருவியும் ஒலிப்பேழைகளும் அறிமுகமானது, திரையிசைப் பாடல்களின் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. திரைப்படப் பாடலைக் கேட்டு ரசிப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. இளையராஜாவின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவிய காலகட்டத்தில் சோனி கம்பெனியின் டேப் ரெக்கார்டர் அரேபிய நாடுகளில் வேலை செய்துவிட்டுத் தமிழகம் திரும்புகிறவர்களால் பிரபலமானது. அதுவரை வானொலி நிலையத்தைச் சார்ந்து பாடல்களைக் கேட்டு ரசித்தவர்கள், தங்களுடைய வீட்டில் ஒலிப்பேழையின் மூலம் விரும்பிய பாடல்களைக் கேட்டு ரசித்தனர். மதுரை நகரமெங்கும் ஆடியோ கேசட் விற்பனைக் கடைகள் தோன்றின. அத்துடன் இசைத்தட்டில் இருந்து விருப்பப்பட்ட பாடல்களை ஒலிப்பதிவுசெய்து தரும் நிறுவனங்களினால் பாடல்களை ரசிக்கிறவர்கள் உற்சாகமாயினர். தேர்தெடுக்கப்பட்ட திரைப்படப் பாடல்களின் ஒலிப்பேழைகளை இயங்கவிட்டுப் பாடல்களைக் கேட்பது பெருவழக்கானது.
எழுபதுகளின் இறுதியில் மதுரை மாநகரில் குடியிருக்கிற உசிலம்பட்டி வட்டாரத்தைச் சார்ந்தவர்கள், இழவு வீட்டில் விடியவிடிய இசைத்தட்டுகளை ஒலிக்க விட்டனர். ’நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்து விடும்’, ’வீடு வரை உறவு, வீடு வரை மனைவி’, ’போனால் போகட்டும் போடா’, ’எட்டடுக்கு மளிகையில் ஏற்றி வைத்த தலைவன்’ போன்ற சோகமான பாடல்கள் ஒலிபரப்பாகும். இரவுவேளையில் சோகப் பாடல்கள் தொலைவில் எங்கோ ஒலித்திட அதைக் கேட்டவாறு துன்பியலான மனநிலையுடன் பின்னிரவுவரை நண்பர்களுடன் இருந்திருக்கிறேன். துயரம் அல்லது இழப்பு கசிந்திடும் பாடல்களை இரவில் கேட்பது, ஒருவகையில் மனதை என்னமோ செய்திடும். இழவு வீட்டில் மைக்செட் மூலம் சோகமான திரையிசைப் பாடல்களை ஒலிபரப்புவது இன்றளவும் தொடர்கிறது.
செயற்கைக்கோள் தொலைக்காட்சி பரவலான நிலையில் இன்று சன் மியூசிக், முரசு, சன் லைஃப், ராஜ் மியூசிக், ஜெயா பிளஸ் எனப் பல சேனல்கள் 24 மணிநேரமும் இடைவிடாமல் திரைப்படப் பாடல்களைக் காட்சிகளுடன் ஒளிபரப்புகின்றன. புதிய பாடல்களைக் காட்சியுடன் கண்டும் கேட்டும் ரசிக்கிறவர்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது.
இசைத்தட்டுகள் வழக்கொழிந்த நிலையில் ஒலிப்பேழைகள் பரவலாகின. பின்னர் அதுவும் பயனற்ற நிலையில் குறுந்தகடு பிரபலமானது. இன்று இணையத்தில் தரவிறக்கம் செய்து ஆயிரக்கணக்கான பாடல்களைப் பென் டிரைவ் மூலம் பதிவு செய்திடும் வசதி வந்துவிட்டது. ஸ்மார்ட் போன் மூலம் காதுகளில் ஹெட்போன் அணிந்து கண்களை மூடியவாறு திரையிசைப் பாடல்களைக் கேட்கிற இளைய தலைமுறையினர் பெருகியுள்ளனர்.
மனிதர்கள் கண்டறிந்த கலைகளில் இசை உன்னதமானது. பாடகர் டி.ஆர்.மகாலிங்கம் ’சில்லென்ற பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினில் நில்லென்று சொல்லிப் போனவளே’ என்று பாடுகிற வரிகள் இன்றும் என்றும் காற்றில் மிதக்கின்றன.