மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்: கோடை காலத்தை சமாளிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை

சென்னை:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது.
பகல் நேரத்தில் வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் இரவில் கடுமையான புழுக்கம் நிலவுகிறது. இதனால் பலர் தூக்கத்தை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோடை காலத்தில் வெயிலை உக்கிரமாக மாற்றும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தாகம் இல்லாவிட்டாலும் அதிக தண்ணீரை குடியுங்கள் என்று கூறியிருக்கும் மா.சுப்பிரமணியன் மது குடிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் அதிகமாக இருப்பதால் வாகனங்களின் சீட்டில் துணியை போட்டு வையுங்கள்.
பிற்பகல் 11 மணி முதல் மாலை 3 மணி வரை அவசியம் இல்லாமல் மக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.
கோடை காலத்தில் உடல் நலன் பாதிக்கப்படும் என்பதால் மது பிரியர்கள் மது குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். கோடை காலம் முடியும் வரை வெளியில் செல்லும் போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போதிய அளவு தண்ணீரை குடிக்க வேண்டும்.
பள்ளிகளுக்கு முன் கூட்டியே விடுமுறை விடுவது தொடர்பாக பள்ளி கல்வித்துறையினர் ஆலோசித்து அறிவிப்பு வெளியிடுவார்கள்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
முன்னதாக சென்னை அபிராமபுரத்தில் கோடை கால கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதில் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.