மது போதையில் பலாத்காரம் நடப்பது சகஜம் தான்- ஆந்திர பெண் அமைச்சர் பேட்டியால் பரபரப்பு

திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜய நகரம், ரிங் ரோடு அருகே ஓடா காலனியை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவரது தாய் விஜய நகரத்தில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு இளம்பெண்ணின் தாய் டீக்கடையில் வேலை செய்வதற்காக சென்றுவிட்டார். இதனை நோட்டமிட்ட அதே பகுதியை சேர்ந்த போலீஸ்காரரின் மகன் செர்ரி (வயது 19). மதுபோதையில் வந்து கதவைத் தட்டினார்.
இளம்பெண் கதவைத் திறந்தவுடன் உள்ளே சென்ற செர்ரி இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து இளம்பெண் டீ கடை உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணின் தாய் மற்றும் டீக்கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அங்கு உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் விஜயநகரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து செர்ரியை கைது செய்தனர். நேற்று குண்டூரில் நடந்த ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் ஆந்திரமாநில உள்துறை அமைச்சர் தானேடி வனிதா கலந்து கொண்டார். அமைச்சரிடம் செய்தியாளர்கள் ஆந்திராவில் பெண்களை பாலியல் பலாத்காரம் தொடர்ந்து நடந்து வருகிறது.
பலாத்காரம்
இதன் மீது அரசின் நடவடிக்கை என்ன என கேட்டனர். அதற்கு அமைச்சர் வனிதா கூறுகையில், ஆண்கள் யாருக்கும் பெண்களை பலாத்காரம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவர்கள் மது அருந்துவதால் அவர்களுடைய மனநிலை திடீரென வேறுபடுகிறது. அதனால்தான் அங்கங்கே பலாத்காரம் நடைபெற்று வருகிறது. பெண்களாகிய நாம் தான் ஆண்களிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஒரு சில தாய்மார்கள் தங்கள் மகள்களை சரிவர வளர்க்காததால் தான் சில இடங்களில் தவறு நடக்கிறது. ஒரு சில இடங்களில் பணத்திற்காகவும் தவறுகள் நடக்கிறது.மதுபோதையில் பலாத்காரம் நடப்பது சகஜமான ஒன்றுதான் என்றார்.
அவரது கருத்துக்கு ஆந்திராவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெண் அமைச்சரின் பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.