ரம்ஜான் பண்டிகை நேற்று இந்தியாவில் மிகவும் விமரிசையாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் ரம்ஜான் கொண்டாட்டத்தின்போது, வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 52 பேரை போலீஸார் கைது செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த இரு மாதங்களாக அரங்கேறிவரும் வகுப்புவாத வன்முறைகள் குறித்து பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்-ஐ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்(மார்க்சிஸ்ட்) `பொலிட்பீரோ’ உறுப்பினர் பிருந்தா காரத் விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பிருந்தா காரத், “அனைத்து மதத்தினருமே, நமது நாட்டின் கலாசாரத்தை மதித்து தங்களின் மத விழாக்களைக் கொண்டாடி வரும் நிலையில், இன்று மத விழாக்கள் யாவும் வகுப்புவாத அரசியலுக்கான ஆயுதங்களாக மாறியிருப்பது உண்மையில் கவலையளிக்கிறது. நேற்று கலவரம் நடந்த ஜோத்பூரே இதற்கு ஓர் வாழும் உதாரணம். ஒரு கொடியின் பெயரால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்குமானால், அது நாட்டுக்கே கவலைக்குரிய விஷயம். மத துருவமுனைப்பு என்ற பெயரில், அமைதியின்மையைப் பரப்ப முயலும் சக்திகள், இதன்மூலம் தங்களின் அஜெண்டாவில் வெற்றிபெறுகின்றன. இது மிகவும் ஆபத்தான ஒன்று” எனக் கூறினார்.