சிக்கன் சவர்மா சாப்பிட்டு பலியான மாணவியின் உயிரிழப்புக்கு அவர் சாப்பிட்ட சவர்மாவில் இருந்த கெட்டுப்போன சிக்கனில் பரவி யிருந்த சிகெல்லா வைரஸ்ஸே காரணம் என்பது பிணக்கூறாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. திறந்த வெளியில் வைத்து விற்கப்படும் சிக்கன் சவர்மாவால் பரவும் விபரீத வைரஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு…
கேரள மாநிலம் காசர் கோடு மாவட்டம் செறுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் கல்லூரி மாணவி தேவ நந்தா. இவர் அந்த பகுதியில் உள்ள ஐடியல் என்ற ஓட்டலில் சிக்கன் சவர்மா வாங்கி சாப்பிட்ட நிலையில் மரணமடைந்தார். இவருடன் சவர்மா வாங்கிச்சாப்பிட்ட நண்பர்கள் வாந்தி வயிற்று போக்கு ஏற்பட்டு மருத்துவ மனைவியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் ஓட்டல்களில் சவர்மா விற்பனைக்கு கேரள அரசு தடை வித்துள்ளது. மாணவி தேவநந்தாவின் பிணக்கூறாய்வு அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், அவரது உயிரிழப்புக்கு சவர்மாவில் பழைய கெட்டு போன சிக்கன் சேர்க்கப்பட்டிருந்ததால், அதில் பரவி இருந்த ஷிகெல்லா வைரஸ் , மாணவியின் உடலில் புகுந்து கடுமையான பாதிப்பை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதையடுத்து சிகிச்சையில் உள்ள மேலும் 3 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கும் சிக்கன் சவர்மா மூலம் ஷிகெல்லா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்,காசர் கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி ராம்தாஸ் தெரிவித்தார்.
ஷிகெல்லா வைரஸ்…. சுகாதாரமில்லாத தண்ணீர் மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களில் உற்பத்தியாகி மனித உயிருக்கு எமனாக மாறும் உயிர்கொல்லி கிருமியாகும்..!
நீண்ட நாட்களாக தேங்கி கிடங்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரமில்லாமல் கடைகளுக்கு வெளியே திறந்த நிலையில் பராமரிப்பில்லாமல் வைத்து விற்கப்படும் அசைவ உணவு வகைகள் மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் பரவிய இந்த வைரஸ் பாதிப்பால் கோழிக்கோடு மாவட்டத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
எரன்ஹிக்கல், அத்தோலி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 குழந்தைகள், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும், ஆரம்பத்தில் டயரியாவின் அறிகுறி போல முதலில் வயிற்று போக்கு வாந்தி போன்றவற்றை உருவாக்கும் இந்த கிருமி அதன் பின்னர் மெல்ல உயிரை கொல்லும் ஆபத்தாக மாறும் என்று எச்சரித்த சுகாதாரத்துறையினர் இந்த ஷிகெல்லா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.