ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் வரும் 20, 21-ம் தேதிகளில் பாஜக சார்பில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவின் வியூகம், தேவையான அமைப்பு மாற்றங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் மே 20ம் தேதியும், பொது செயலாளர்கள் கூட்டம் மே 21ம் தேதியும் நடக்கிறது.
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஓராண்டுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோகிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்துக் கொண்டு கட்சி தொண்டர்களிடம் பேசுவார் என்று பாஜக உறுதி செய்துள்ளது.
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை தாங்கும் இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் உள்ள கட்சியின் மாநிலத் தலைவர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், இணைப் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுச் செயலாளர்கள் ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
மேலும், இந்த கூட்டத்தில் கட்சி நிறுவியதில் இருந்து அதன் அமைப்பை வலுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விரிவான விவாதம் நடத்தப்படும் என்றும் பாஜகவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்.. டென்மார்க் ராணியுடன் பிரதமர் மோடி சந்திப்பு