மோசடி மன்னன் சுகேஷுக்கு உதவிய சிறை அதிகாரி கைது| Dinamalar

மோசடி மன்னன் சுகேஷுக்கு உதவிய சிறை அதிகாரி கைது

புதுடில்லி : டில்லியில் ரெலிகேர் என்டர்பிரைசஸ் நிறுவன முன்னாள் பங்குதாரர் ஷிவிந்தர் மோகன் சிங், 2019ல் நிதி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில், பண மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர், ஷிவிந்தர் மோகனுடன் பழக்கமானார்.பின், ‘ஜாமின்’ பெற்ற சுகேஷ், ஷிவிந்தர் மோகனின் மனைவி அதிதியை சந்தித்து, அவரது கணவருக்கு ஜாமின் கிடைக்க உதவுவதாக கூறி பண மோசடி செய்து உள்ளார்.

இது தொடர்பாக, டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சுகேஷ் சந்திரசேகரை மீண்டும் கைது செய்தனர்.இதற்கிடையே, டில்லி ரோகிணி சிறையில் சுகேஷ் இருந்தபோது, அதிதியிடம், அவரது கணவரின் ஜாமின் தொடர்பாக அரசு அதிகாரி போல் ‘மொபைல் போனில்’ பலமுறை பேசியது விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில், சிறை கைதியான சுகேஷ் சந்திரசேகருக்கு, சலுகைகள் தந்து உதவிய வழக்கில், ரோகிணி சிறை உதவி கண்காணிப்பாளர் பிரகாஷ் சந்த், 57, கைது செய்யப்பட்டு இருப்பதாக, போலீசார் நேற்று கூறினர்.

அக்காவை கொலை செய்த தம்பி

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டியில் சொத்து தகராறில் சகோதரி பாஞ்சாலியை 58, அரிவாளால் வெட்டி கொலை செய்த தம்பி ரமேைஷ 50, போலீசார் கைது செய்தனர்.கூலித்தொழிலாளியான ரமேஷூக்கும், பாஞ்சாலிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பாஞ்சாலி அழகாபுரியில் வசித்து வருகிறார்.

latest tamil news

நேற்று மதியம் செவல்பட்டி பூர்வீக வீட்டின் முன் இருவருக்கும் சொத்து தகராறில் வாக்குவாதம் முற்றியது. ரமேஷ் அரிவாளால் பாஞ்சாலி கழுத்தில் வெட்டியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். ரமேைஷ வடக்கு போலீசார் கைது செய்தனர்.

சிலைகள் மீது கார் மோதல் சென்னை பெண் பலி

ஆம்பூர் : ஆம்பூர் அருகே, சாலையோர சுவாமி சிலைகள் மீது கார் மோதியதில், சென்னை பெண் பலியானார். உடன் வந்த மூன்று பேர் படுகாயமடைந்தனர்.சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். எழும்பூரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கர்நாடகா மாநிலம், பெங்களூரிலுள்ள உறவினர்களை பார்க்க குடும்பத்தினருடன் நேற்று அதிகாலை, ‘ஜீப் காம்பஸ்’ காரில் புறப்பட்டு சென்றார்.காரை அவரது மகன் அமிதாப் ஓட்டினார். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வீரவர் கோவில் என்ற இடத்தில், சாலையோர அரச மரத்தடியில், ஐந்து சுவாமி சிலைகள் உள்ளன.

அப்பகுதியில், நேற்று காலை 9:00 மணிக்கு கார் வந்த போது, சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமலிருக்க அமிதாப் காரை திருப்பினார். அப்போது, சுவாமி சிலைகள் மீது கார் மோதியது.இதில், சம்பவ இடத்திலேயே சீனிவாசன் மனைவி மாலதி, 53, பலியானார். படுகாயம்அடைந்த சீனிவாசன், 55, அமிதாப், 24, அவரது மகன் துருவா, 5, ஆகியோர் வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம்மண்டபம் அகதிகள் முகாமில் இலங்கை அகதி பெண்ணின் வீட்டிற்கு சென்று அத்துமீறிய மரைன் போலீஸ்காரர் அன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இலங்கையில் இருந்து மார்ச் 22 படகில் மூன்று குழந்தைகளுடன் இளம் பெண் உட்பட ஆறு பேர்ராமேஸ்வரம்வந்தனர். கணவரை பிரிந்த அப்பெண்மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கிறார்.

latest tamil news

இருநாட்களுக்கு முன் இரவு அவரது வீட்டிற்கு சென்ற போலீஸ்காரர் அன்பு, கதவை திறக்ககட்டாயப்படுத்தியுள்ளார்.பெண்ணின்கூச்சல்கேட்டு அக்கம்பக்கத்தினர்வந்ததால் போலீஸ்காரர் தப்பினார். மண்டபம் போலீசார் விசாரித்தனர்.ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட அன்புவை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., கார்த்திக் உத்தரவிட்டார்.

துாத்துக்குடியில் 52 பவுன் நகை திருட்டு

துாத்துக்குடி : துாத்துக்குடி அருகே பேரூரணியில் வீட்டின் பின் கதவை உடைத்து 52 பவுன் தங்கநகைகள், ரூ.1.36 லட்சத்தை திருடி சென்றவர்களை தட்டப்பாறை போலீசார் தேடுகின்றனர்.பேரூரணியை சேர்ந்தவர் சுடலைமுத்து 60. இவர் மனைவி, இரு மகன்களுடன் வசிக்கிறார். நேற்று முன் தினம் இரவு இவர் மனைவியுடன் மாடி அறையில் தூங்கினார்.

தரைத்தளத்தில் மகன்கள் தூங்கினர். நள்ளிரவில் வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் தங்க நகைகள், பணத்தை திருடி சென்றனர். இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

சி.ஆர்.பி.எப்., போலீசிடம் ரூ.ஒரு லட்சம் மோசடி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தாலுகா காக்கூர் காமராஜபுரம் சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரர் திவாகரிடம் 28, கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்வதாக கூறி ரூ.ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த திவாகர் 2017 முதல் ஆந்திர விசாகபட்டினத்தில் பணிபுரிந்து வருகிறார். குடும்ப பயன்பாட்டிற்காக பரமக்குடி வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு துவங்கி வரவு செலவு செய்து வருகிறார். இரு மாதங்களுக்கு முன் வங்கியில் இருந்து பேசிய ஒருவர் கிரெடிட் கார்டு பயன் குறித்து விளக்கியதால் அதை வாங்கினார். ஆனால் ஆக்டிவ் செய்யவில்லை.

இந்நிலையில் ஏப்., 11ல் 74176 87309 என்ற அலைபேசியில் இருந்து பேசிய பெண் ஹிந்தியில் வங்கி மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அவர் கூறியபடி கிரெடிட் கார்டு ஆக்டிவ் செய்ய மூன்று இலக்க எண்ணை பதிவு செய்து, ஓ.டி.பி., எண்ணையும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்தில் கார்டை சரி பார்த்த போது ரூ.ஒரு லட்சம் பணம் எடுக்கப்பட்டது தெரிந்தது. அவரது புகாரின்படி ராமநாதபுரம் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் விசாரிக்கிறார்.

நண்பரின் மகள் பலாத்காரம் தொழிலாளி மீது ‘போக்சோ’

ஓசூர் : பாகலுார் அருகே நண்பரின், 8 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த, வட மாநில தொழிலாளி, ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் சந்திரபலி, 37; கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் அருகே தோட்ட வேலை செய்கிறார். தன்னுடன் பணியாற்றும் அதே மாநிலத்தை சேர்ந்த, 36 வயது நண்பருடன் ‍சேர்ந்து நேற்று முன்தினம் மது அருந்தினார்.

பின், அந்த நண்பர் கர்ப்பமான மனைவியை பரிசோதனைக்கு மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டி உள்ளதால், வீட்டில் தனியாக இருந்த தன் 8 வயது மகளுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு சந்திரபலியிடம் கூறி சென்றார்.குடிபோதையில்இருந்த சந்திரபலி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், சிறுமியை மீட்டு, சந்திரபலியை வீட்டிற்குள் வைத்து பூட்டினர்.சிறுமியை சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வீட்டில் அடைக்கப்பட்டிருந்த சந்திரபலியை போலீசார் மீட்டு, போக்சோ எனும் பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்றங் களுக்கு கடும் தண்டனை அளிக்க வகை செய்யும் சட்டத்தில் கைது செய்தனர்.

காமுகனை ‘துவைத்த’ கிராம மக்கள்

மைசூரு : சாக்லேட் ஆசை காண்பித்து, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த நபரை, கிராமத்தினர் அடித்து, உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மைசூரு ஹுன்சூரின், பிலிகரே பேரூராட்சியின், சல்லஹள்ளி கிராமத்தில் வசிக்கும் 7 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை, வீட்டின் வெளியே தனியாக விளையாடினார். அப்போது அவ்வழியாக வந்த காளநாயக், 45, சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக, ஆசை காண்பித்து ஊருக்கு வெளியே அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். சிறுமி அந்நபரின் கையை கடித்துவிட்டு தப்பிச்சென்று, பாட்டியிடம் நடந்ததை கூறினார்.ஆத்திரமடைந்த கிராமத்தினர், காளநாயக்கை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து உதைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த பிளிகரே போலீசார், அந்நபரை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

பெங்களூரு வந்த 700 கிலோ வாள்

பெங்களூரு : கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில், 108 அடி உயரத்தில் அவரது உருவச்சிலை அமைக்கப்பட்டு வருகிறது. அவரின் கையில் பிடித்திருக்கும் 700 கிலோ எடை கொண்ட வாள் பெங்களூரு வந்தது.பெங்களூரை 1,537ல் உருவாக்கியவர் கெம்பே கவுடா. இவரின் நினைவாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்கு, ‘கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம்’ என பெயர் சூட்டப்பட்டது.

இதையடுத்து, 2020ல் அவரின் 511வது பிறந்த நாளை ஒட்டி, விமான நிலையத்தில், 23 ஏக்கரில் அவர் தொடர்பான, ‘பாரம்பரிய பூங்கா’ அமைக்கும் பணிகள், 85 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இங்கு 108 அடி உயரம் கொண்ட கெம்பே கவுடா சிலை அமைக்கும் பணிகளும் நடக்கிறது.இந்த சிலையை, உ.பி.,யின் நொய்டாவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிற்பி ராம் வன்ஜி சுத்தர் செய்து வருகிறார். இவர், குஜராத்தில், ‘ஒற்றுமை சிலை’ எனும் சர்தார் வல்லபாய் படேல்; பெங்களூரு விதான் சவுதா – விகாஸ் சவுதா இடையே அமைந்துள்ள மஹாத்மா காந்தி உருவ சிலையை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், கெம்பே கவுடா சிலையில் பொருத்துவதற்கான வாள் தனியாக செய்யப்பட்டது.

700 கிலோ எடையுள்ள இந்த வாள், டில்லியிலிருந்து பெங்களூருக்கு தனி டிரக் மூலம், நேற்று முன்தினம் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதற்கு உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா சிறப்பு பூஜை செய்தார்.கடந்த 2021ல் முடிந்திருக்க வேண்டிய சிலை அமைக்கும் பணி, கொரோனா ஊரடங்கால் தாமதமாக நடந்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.