காங்கிரஸ் மூத்த தலைவர்
ராகுல் காந்தி
வெளிநாட்டு நைட் கிளப் ஒன்றில் அவர் பார்ட்டியில் கலந்து கொண்டது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ராகுல் காந்தி பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பது போன்றும், செல்போனை இயக்குவது போன்றும் உள்ளது.
ராகுல் காந்தியுடன் இருக்கும் பெண் நேபாள நாட்டுக்கான சீன தூதர் எனவும், அந்நாட்டு பிரதமரை
ஹூ யாங்கி
எனவும், நேபாள முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலியை ஹனிட்ராப்பில் (பாலியல் வலை வீசி அதில் சிக்கும் வைத்து மிரட்டுவது) சிக்க வைத்தவர் எனவும் பலவாறான கருத்துகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. ஆனால், அப்பெண் ஹூ யாங்கி இல்லை என்பதும் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கும் பாஜகவினர் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ராகுல் காந்தி தனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நேபாளம் சென்றுள்ளதாக அவரது பயணம் பற்றி காங்கிரஸ் விளக்கம் அளித்த போதும் கூட, சீன நாட்டு தூதருடன் தனிப்பட்ட பயணத்தில் ராகுல் காந்தி உரையாடியது பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
யார் இந்த ஹூ யாங்கி?
ஹூ யாங்கி சீன நாட்டு தூதராவார். சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் 1970ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த அவர், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் நேபாளத்திற்கான அசாதாரண மற்றும் முழு அதிகாரம் பெற்ற சீனத் தூதராக பணியாற்றி வருகிறார். முதுகலை பட்டதாரியான அவர், நேபளத்துக்கான சீனத் தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்பு சீன வெளிவிவகார அமைச்சகத்தின், வெளிவிவகாரப் பாதுகாப்புத் துறையின் இயக்குனராகவும், வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்கள் துறையின் ஆலோசகராகவும், வெளியுறவு அமைச்சகத்தின் ஆசிய விவகாரங்கள் துறையின் துணை இயக்குநர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சீன துணைத்தூதரக அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
ஹூ யாங்கி சர்ச்சை
நேபாளத்துக்கான சீனத் தூதராக ஹூ யாங்கி பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான உறவுகள் சமீப காலமாக மோசமடைந்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். நேபாளத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுலா, பூகம்பத்திற்குப் பிந்தைய மறுசீரமைப்பு மற்றும் நாட்டின் வர்த்தகம் மற்றும் எரிசக்தி வளங்களில்
சீனா
முதலீடு செய்து வருகிறது.
நேபாள அரசாங்கச் செயலகத்திற்குச் சென்றபோது ஸ்காட்ச் விஸ்கிகளை கையில் எடுத்துக் கொண்டு ஹூ யாங்கி சென்றதாகவும், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஷ்வர் ராய் யாதவுக்கும் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் நேபாள ஊடகங்களால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானவர்.
2020 ஆரம்ப காலகட்டத்தில் நேபாளத்தில் சீனாவின் அதிகரித்து வரும் அரசியல் செல்வாக்கு காரணமாக நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. 2020 ஜூன் மாதத்தில் லிம்பியாதுரா, லிபுலேக் மற்றும் கலாபானி எனப் பெயரிடப்பட்ட இந்தியாவுடனான பிரதேசங்களை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை அங்கீகரிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பு, அந்த பகுதிகள் நேபாள வரைபடத்திற்குள் கொண்டு வரப்படும் என்று அப்போதைய நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கூறியிருந்தார்.
இது இந்தியா-நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான விரிசலை உருவாக்கியது. நேபாளத்துக்கான சீன தூதர் ஹூ யாங்கி தான் இதற்கு காரணம் என்று இந்திய தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் குற்றம் சாட்டினர். ஷர்மா ஒலியை ஹனிட்ராப்பில் (பாலியல் வலை வீசி அதில் சிக்கும் வைத்து மிரட்டுவது) ஹூ யாங்கி சிக்க வைத்து விட்டார் எனவும், ஷர்மா ஒலி இந்த வயதில் காதல் வலையில் விழுந்து விட்டதாகவும் விமர்சனங்கள் கடுமையாக முன்வைக்கப்பட்டன. இதனால், 2020ஆம் ஆண்டில் தூர்தர்ஷன் தவிர இந்திய தொலைக்காட்சி சேனல்கள் நேபாளத்தில் முடக்கப்பட்டன. ஹூ யாங்கி தலையீட்டின் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.