வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி சென்றதாக நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கொலை வழக்கு என்றாலே ஆதாரங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கும். அப்படியான ஆதாரங்கள் இல்லையெனில் சரியான நீதி கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் கொலை வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களை குரங்கு தூக்கி சென்றுள்ளதாக போலீசாரே தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பரில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சந்த்வாஜி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சுஷிகாந்த் சர்மா என்ற இளைஞர் மாயமானார்.
இது தொடர்பாக போலீசார் தேடிவந்த நிலையில், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். எனவே, கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சந்த்வாஜி பகுதியில் வசிக்கும் ராகுல் கண்டேரா மற்றும் மோகன்லால் கண்டேரா ஆகியோரை 5 நாட்களுக்கு பிறகு கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட 15 வகையான ஆதாரங்களை கைப்பற்றி ஒரு பையில் சேகரித்தனர்.
ஆதாரங்களை வைக்கும் அறையில் போதிய இடம் இல்லாததால் அந்த பையை அஜாக்கிரதையாக போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மரத்தடியில் வைத்துள்ளனர். இந்த பை தான் தற்போது போலீசாருக்கும் பெரும் தலைவலியாக மாறியது. இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், ஆதாரங்களை சமர்பிக்குமாறு கோரியது. அப்போது, ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு ஒன்று தூக்கி சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஆதாரங்களை குரங்கு தூக்கி சென்றதாக போலீசார் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்தனர். போலீசாரின் அஜாக்கிரதையை கண்டித்த நீதிபதிகள், ஆதாரங்களை எப்படியாவது திரும்பப்பெற வேண்டுமென உத்தரவிட்டனர்.
Advertisement