வட கொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது.
கிழக்கு ஆசிய நாடான
வட கொரியா
, அணு ஆயுதங்களை தாக்கிச் செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது.
மேலும், தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. அணு ஆயுத சோதனையை கைவிடும்படி அமெரிக்கா தொடர்ந்து வட கொரியாவை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதற்கு வட கொரியா கொஞ்சம் கூட செவி சாய்க்கவில்லை. உலக நாடுகளின் கோரிக்கைகளை கவனிக்காமல், அவ்வப்போது, அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.
உக்ரைனின் கிழக்கு பகுதிகளை இணைக்க ரஷ்யா திட்டம் – அமெரிக்கா குற்றச்சாட்டு!
இதற்கிடையே, இந்த ஆண்டு தொடக்கம் முதல் வட கொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என, பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது.
இந்நிலையில், வடகொரியா நேற்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்து உள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. தலைநகர் பியோங்யங் அருகே உள்ள சுனன் என்ற நகரில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டதாகவும், அது கிழக்குக் கடல் (ஜப்பான் கடல்) நோக்கி சென்றதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. ஜப்பானின் கடலோர காவல் படையும் வட கொரியா “பாலிஸ்டிக் ஏவுகணையை” ஏவியதை உறுதிப்படுத்தி உள்ளது.