ராஜபாளையம் அருகே தம்பி விபத்துக்குள்ளாகி இறந்ததில் சந்தேம் இருப்பதாக அக்கா அளித்த புகாரை அடுத்து 1ஆம் தேதி புதைக்கப்பட்டவரின் உடல், 4 நாட்களுக்கு பிறகு அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு, மயானத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள அருள்புத்தூரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். எனவே உடன் பிறந்த சகோதரி மேரி என்பவர் ஆதரவுடன், தனி வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி நள்ளிரவு பாக்கியராஜ் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்காமல், உறவினர்கள் பாக்கியராஜ் உடலை அருகேயுள்ள இடுகாட்டில் புதைத்து விட்டனர்.
இந்த நிலையில், நேற்று பாக்கியராஜ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற மேரி, வீட்டின் பல்வேறு இடங்களில் ரத்தக்கறை இருந்ததை பார்த்துள்ளார். ஏற்கெனவே தன்னுடைய உடன் பிறந்த மூத்த சகோதரன் அந்தோணிராஜ் என்ற வேல்முருகனுக்கும், பாக்கியராஜூக்கும் முன்பகை இருந்துள்ளது. இதை மனதில் வைத்துக்கொண்டு பாக்கியராஜை அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து போன்று ஜோடித்து இருக்கலாம் என சந்தேகம் அடைந்த மேரி, நேற்று தளவாய்புரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இன்று உடலை தோண்டி எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் ராமச்சந்திரன், டிஎஸ்பி சபரிநாதன் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம், மேரியின் மற்றொரு சகோதரர் குமார் அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து, புதைக்கப்பட்ட பாக்கியராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மயானத்திலேயே துணியால் கூடாரம் அமைக்கப்பட்டு, விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவர் சுதன் அதே இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொண்டார். அந்த நேரத்தில் பாக்கியராஜின் சகோதரி மேரி மற்றும் அவரது மகன் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பரிசோதனையின் அறிக்கை இன்னும் ஒருசில தினங்களில் கிடைக்கும் எனத் தெரிவித்த காவல்துறையினர், முதற் கட்டமாக குற்றம் சாட்டப்பட்ட அந்தோணிராஜ் என்ற வேல் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM