தெலங்கானா
மாநிலம் ஐதராபாத்தில், இன்று அதிகாலை முதல் விடிய விடிய பெய்த
கனமழை
காரணமாக, சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அண்டை மாநிலமான தெலங்கானாவில், கடந்த சில நாட்களாக, கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், வீடுகளிலும், கடைகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
தெலங்கானா மாநில வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக சித்திப்பூர் மாவட்டத்தில் சபிப் நகரில் 108 மி.மீ. மழையும், ஐதராபாத்தில் உள்ள செகந்திராபாத் அருகே உள்ள சிதம்பூர் மண்டியில் 72.8 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது. காலை நிலவரப்படி அதிகபட்சமாக பன்சிலால்பேட்டையில் 67 மி.மீ. மழையும், மேற்குமாரடைப்பள்ளியில் 61.8 மி.மீ. மழை பெய்திருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்தது.
தாழ்வான பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த திடீர் மழையால் வீடுகள், கடைகளில் வெள்ளநீர் புகுந்தும், சில இடங்களில் சாலைகளே தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கியும் உள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
பலத்த சூறைக்காற்று காரணமாக சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஒருசில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தெலங்கானாவின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.