வைரல் வீடியோ: லிவிங்ஸ்டன் அடித்த பிரமாண்ட சிக்ஸர்… பேட்டை தட்டி பார்த்த ரஷீத்!

IPL 2022, Gujarat Titans vs Punjab Kings: 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய மண்ணில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றை 48-வது லீக்ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் அரைசதம் அடித்தார். மேலும் அவர் 50 பந்துகளில் ஒரு சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 144 என்கிற வெற்றி இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 16வது முடிவிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியது. தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வீரர்களில் பானுகா ராஜபக்ச 40 ரன்கள் எடுத்தார். அரைசதம் அடித்த ஷிகர் தவான் 62 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சமியை வெளுத்து வாங்கிய லிவிங்ஸ்டன்…

இந்த ஆட்டத்தில் பானுகா ராஜபக்சவின் விக்கெட்டுக்கு பின்னர் களமாடிய லியாம் லிவிங்ஸ்டன் தவானுடன் மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். பஞ்சாப் அணியின் வெற்றிக்கு கடைசி 30 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தனது அதிரடியை துவங்கிய ஆல்ரவுண்டர் வீரர் லிவிங்ஸ்டன் இந்திய வீரர் முகமது சமி வீசிய 16வது ஓவரில் முதல் 3 பந்துகளில் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்க விட்டு ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார்.

அதோடு தனது அதிரடியை இடைநிறுத்தாத அவர் 4-வது பந்தை பவுண்டரி கோட்டிற்கு விரட்டி, 5-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார். 6 பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரியை விரட்டினார். அவரின் இந்த ‘தெறிக்கவிடும்’ ஆட்டத்தால் பஞ்சாப் அதே ஓவரில் வெற்றியை ருசித்தது. இப்படி அடி வாங்குவோம் என கனவில் கூட நினைக்காத சமி 28 ரன்களை வாரிக்கொடுத்தார்.

பிரமாண்ட சிக்ஸரை பறக்கவிட்ட லிவிங்ஸ்டன்…

லியாம் லிவிங்ஸ்டன் அடித்த 3 சிக்ஸர்களில் முதல் சிக்ஸர் 117 மீட்டர் தூரம் வரை பறந்தது. மைதானத்தில் இருந்து இதைப் பார்த்தவர்கள் அனைவரும் வாயைப்பிளந்தனர். குறிப்பாக பஞ்சாப் அணியின் கேப்டன் மயங் அதிர்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார். டிவியில் வர்ணனை செய்த கெவின் பீட்டர்சன் தனது வாழ்நாளில் தான் பார்த்த மிகப்பெரிய சிக்ஸர்களில் இது பிரம்மாண்டமானது என்று ஆச்சரியப்பட்டு போனார்.

இந்த பிரம்மாண்ட சிக்ஸருக்கு பிறகு லிவிங்ஸ்டன் தனது பேட்டில் ஸ்ப்ரிங் எதுவும் வைத்திருக்கிறாரா என்பது போல் அவரது பேட்டை பிடித்து தட்டிப்பார்த்தார் குஜராத்தின் சுழல் மன்னன் ரஷீத் கான். இந்த வாணவேடிக்கை சிக்ஸர் மூலம் நடப்பு தொடரில் மிகப்பெரிய சிக்சரை பறக்க விட்ட வீரர் என்ற சாதனையும் லியம் லிவிங்ஸ்டன் படைத்துள்ளார்.

5வது இடத்திற்கு முன்னேறிய பஞ்சாப்…

பஞ்சாப் கிங்ஸ் வீரர் லியம் லிவிங்ஸ்டன் பொழிந்த ரன் மழையால், புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் இருந்த அந்த அணி ரன்ரேட் அடிப்படையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 5ல் வெற்றி 5ல் தோல்வி என 10 புள்ளிகளை பெற்றுள்ளது. மேலும் அந்த அணியின் ரன்ரேட் தற்போது -0.029 ஆக உள்ளது.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.