'36 மாநிலங்களிலும் மாரத்தான் ஓட ஆசை': அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: “இந்தியாவில் இதுவரை 22 மாநிலங்களில் நடைபெற்ற மாரத்தானில் ஓடியுள்ள நான், 36 மாநிலங்களிலும் ஓடி எனது கால்தடத்தை பதிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது” என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்

தேக்வாண்டோ விளையாட்டில் ஜம்பிங் ஜாக்ஸ் என்ற பிரிவில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெற்றது. ஒரு செட்டுக்கு 2.15 நிமிடம் வீதம் 3 செட்டுகள் தொடர்ச்சியாக ஜம்பிங் ஜாக்ஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் 300 பேர் பங்கேற்ற இதில் கடுமையான சோதனைகளுக்குப்பிறகு 170 பேர் தேர்ச்சி பெற்றனர்.

கின்னஸ் சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது. இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “எனக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பாக சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டதும் அதன்பிறகு உடல் ஆரோக்கியத்திற்காக ஓடத்துவங்கிய நான், தொடர்ந்து ஓட்டப்பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். பின்னர் அதனைத்தொடர்ந்து மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறேன். அதில் பல சாதனைகளும் படைத்துள்ளேன்.

கின்னஸ் சாதனையில் இடம்பெறுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல கட்ட தடைகளை, பல சோதனைகளை கடந்து தான் இடம்பெற முடியும். அத்தகைய கின்னஸ் சாதனையில் இங்கு ஒரே பகுதியைச் சேர்ந்த 36 பேர் இடம்பெற்றிருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் 4 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் இந்த விளையாட்டில் எதிர்காலத்தில் இன்னும் உச்சம்தொடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

உள்ளூர், வெளியூர், வெளிநாடுகள் என இதுவரை மொத்தம் 135 மாரத்தானில் பங்கேற்றுள்ளேன். ஏதென்சில் மாரத்தான் ஓட்டம் பிறந்த இடமான “மாரத்தான்” என்ற ஊரில் நடந்த ஓட்டத்திலும் பங்கேற்றுள்ளேன். இந்தியாவில் இதுவரை 22 மாநிலங்களில் நடைபெற்ற மாரத்தானில் ஓடியுள்ளேன். கடைசி மாநிலமாக உருவாகியுள்ள லடாக்கையும் சேர்த்து 36 மாநிலங்களிலும் ஓடி எனது கால் தடத்தைப்பதிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக உள்ளது. எனது கால்கள் ஓடும்வரை தொடர்ந்து உடல் ஆரோக்கியத்துக்காக ஓடுவேன். இதுவே எனக்கு சாதனைகளாக
அமைந்து எனக்கு பெருமை தேடித்தருகிறது.

அதே போல் இங்கு தேக்வாண்டோவில் சாதனை படைத்தவர்கள் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று அமைச்சர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஓஎம்ஆர் தேக்வாண்டோ அகாடமி பயிற்சியாளர் வெங்கடேசன், சர்வதேச தேக்வாண்டோவில் தங்கப்பதக்கம் வென்ற உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.