சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் இரண்டாவது சுற்றில் வியரியல் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது லிவர்பூல். முதல் சுற்றில் 2 கோல்கள் முன்னிலை பெற்றிருந்த லிவர்பூல், இந்தச் சுற்றின் முதல் பாதியிலேயே 2 கோல்கள் விட்டது. வியரியல் அணி கம்பேக் கொடுத்துவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கையில், இரண்டாவது பாதியில் அட்டகாசமாக விளையாடி 3 கோல்கள் அடித்தது கிளாப்பின் அணி. இறுதியில் இந்த அரையிறுதியை 5-2 என வென்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது லிவர்பூல்.
ஆன்ஃபீல்டில் கடந்த வாரம் நடந்த முதல் சுற்றிப் போட்டியில், லிவர்பூல் அணி 2-0 என வெற்றி பெற்றிருந்தது. எஸ்துபின்யான் அடித்த ஓன் கோல், சாடியோ மனேவின் கோல் ஆகியவற்றின் மூலம் வெற்றி பெற்றிருந்தது அந்த அணி. வியரியல் அணி கொஞ்சம் கூட அட்டாக்கில் ஈடுபாடு இல்லாமல் ஆடியது கடும் விமர்சனத்துக்குள்ளானது. உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் லிவர்பூல் அணி வியரியலில் நடக்கும் இரண்டாவது போட்டியிலும் நிச்சயமாக வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்துவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தப் போட்டி எதிர்பார்த்ததைப்போல் அமையவில்லை.
போட்டி தொடங்கியவுடனேயே வியரியல் அணி அட்டாக் செய்யத் தொடங்கியது. அதன் பலனாக மூன்றாவது நிமிடத்திலேயே கோலடித்தது வியரியல். லிவர்பூல் தொடர்ந்து பந்தை இழந்துகொண்டே இருக்க, பந்தை இடதுபுறம் நகர்த்தியது வியரியல். லெஃப்ட் பேக் எஸ்துபீன்யன் அனுப்பிய கிராஸ், இரண்டாவது போஸ்ட்டைத் தாண்டிச் சென்றது. நடுவிலிருந்து பாக்சுக்குள் நுழைந்த எடியன் கபூ, பந்தை கோல் நோக்கி கிராஸ் செய்தார். அங்கிருந்த புலாயே டியாவை விர்ஜைல் வான் டைக் சரியாக மார்க் செய்யாமல் போக, அந்தப் பந்தை எளிதாக கோலாக்கினார் டியா. மூன்றே நிமிடத்தில் வியரியல் கோலடிக்க, ஒட்டுமொத்த மைதானமும் உற்சாகத்தில் மிதந்தது.
அந்த கோலுக்குப் பிறகு வியரியல் வீரர்கள் உத்வேகத்தோடு விளையாடினர். அந்த முதல் கோல் லிவர்பூல் வீரர்களைப் பெரிய அளவில் பாதித்தது. அதனால், நிறைய பாஸ்களை அந்த வீரர்கள் தவறவிட்டனர். அவர்களால் பால் பொசிஷனையும் தக்கவைக்க முடியவில்லை. இது வியரியல் அணிக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. தொடர்ந்து லிவர்பூல் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டுக்கொண்டே இருந்தனர். 37-வது நிமிடத்தில் நபி கீடா பந்தைத் தவறவிட, அதைப் பெற்ற ஜெரார்ட் மொரேனோ, பெனால்டி ஏரியாவுக்குள் அனுப்பினார். அதை சேஸ் செய்த ஜியோவானி லோ செல்சோ, பந்தை கன்ட்ரோல் செய்ய நினைத்தபோது லிவர்பூல் கோல்கீப்பர் ஆலிசன் மீது மோதி கீழே விழுந்தார். வியரியல் வீரர்கள் பெனால்டி கேட்க, நடுவர் அதை நிராகரித்தார்.
ஆனால், அடுத்த 4 நிமிடங்களிலேயே இரண்டாவது கோலை அடித்தது வியரியல். லிவர்பூல் பாக்சின் வலது பக்கம் பாக்சோடு நுழைந்த எடியன் கபூ, தன் இடது கால் மூலம் பெனால்டி ஏரியாவுக்குள் ஒரு கிராஸை அனுப்பினார். அதை ஹெட்டர் மூலம் கோலாக்கினார் ஃபிரான்சிஸ் காக்லின். முதல் பாதியில் வியரியல் அணி 2 கோல்கள் முன்னிலை பெற்றது. இந்த அரையிறுதி 2-2 என சமநிலையில் இருந்தது.
முதல் பாதியில் டார்கெட் நோக்கி ஒரு ஷாட் கூட அடிக்காத லிவர்பூல், இரண்டாவது பாதியில் தொடர்து அதிரடி காட்டியது. டியாகோ ஜோடாவுக்குப் பதிலாகக் களமிறங்கிய லூயிஸ் டியாஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து கோல் முயற்சிகளை மேற்கொண்ட லிவர்பூலுக்கு 62-வது நிமிடத்தில் முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் ஃபெபினியோ. வலது பக்கமிருந்து அவர் அடித்த ஷாட், கோல்கீப்பர் ரூல்லியின் கால்களுக்கு நடுவே புகுந்து கோலானது.
அடுத்த ஐந்து நிமிடங்களில் இன்னொரு கோலையும் அடித்தது லிவர்பூல். இது கிட்டத்தட்ட வியரியல் அணியின் இரண்டாவது கோலைப் போலவே அமைந்தது. வலது புறமிருந்து தன் இடது காலில் அலெக்சாண்டர் ஆர்னால்ட் கொடுத்த கிராஸை, ஹெட்டர் மூலம் கோலாக்கினார் லூயிஸ் டியாஸ். ஆட்டம் 2-2 என்றாக, இந்த அரையிறுதியில் 4-2 என முன்னிலை பெற்றது லிவர்பூல்.
இரண்டு கோல்கள் முன்னிலை பெற்றும் லிவர்பூல் வீரர்கள் ஓயவில்லை. தொடர்ந்து வியரியல் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டுக்கொண்டே இருந்தனர். அதன் பலனாக 74-வது நிமிடத்தில் அந்த அணிக்கு இன்னொரு கோலும் கிடைத்தது. நபி கீடா கொடுத்த லாங் பாஸை துரத்தி, தங்கள் பாதியிலிருந்து வியரியல் பாக்ஸ் நோக்கி ஓடினார் சாடியோ மனே. அந்தப் பந்தைக் கிளியர் செய்ய பாக்சை விட்டு வெளியே வந்த வியரியல் கோல்கீப்பர் ரூல்லி, பந்தைத் தொடாமலேயேவிட, அதைக் கட்டுப்படுத்தி முன்னேறி கோலாக்கினார் மனே.
மூன்று கோல்கள் பின்தங்கிய வியரியல் அணி பல மாற்றங்கள் செய்தும், பல அட்டாக்குகளை முன்னெடுத்தும் அதன்பிறகு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக, லிவர்பூல் இளம் மிட்ஃபீல்டர் கர்டிஸ் ஜோன்ஸை ஃபவுல் செய்ததற்காக இரண்டாவது யெல்லோ கார்ட் பெற்று வெளியேறினார் கபூ. இறுதியில் ஆட்டம் 3-2 என முடிந்தது. இந்த அரையிறுதியை 5-2 என வென்றது லிவர்பூல். இதன்மூலம் பத்தாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்குள் நுழைந்திருக்கிறது லிவர்பூல்.