GoBackChidambaram: ப.சிதம்பரத்துக்கு காங்கிரஸ் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

முன்னாள் மத்திய நிதியமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்திற்கு எதிராக,
காங்கிரஸ்
கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறி அக்கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்களில் சிலர் கல்கத்தா உயர் நிதிமன்ற வளாகத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். வேளாண் செயலாக்க நிறுவனமான கெவென்டரின் சார்பாக
ப.சிதம்பரம்
ஆஜரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை சூழ்ந்து கொண்டு GoBackChidambaram என்று வழக்கறிஞர்கள் முழக்கமிட்டனர்.

காங்கிரஸ் கட்சியின் உணர்வுடன் சிதம்பரம் விளையாடுகிறார் என்று குற்றம் சாட்டிய வழக்கறிஞர்கள், metro dairyஇன் பங்குகளை விற்பனை செய்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்
அதிர் ரஞ்சன் சவுத்ரி
வழக்கு தொடர்ந்துள்ள போது, ப.சிதம்பரம் அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜராவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்களில் ஒருவரான வழக்கறிஞர் கவுஸ்தவ் பாக்சி கூறுகையில், “கெவென்டர் நிறுவனம் பங்குகளை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க காங்கிரஸ் கமிட்டித் தலைவரால் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஆஜராகிறார். காங்கிரஸ் காரிய கமிட்டியின் உறுப்பினரான ப.சிதம்பரம் ஒரு முக்கியமான தலைவர். நான் வழக்கறிஞராக அல்லாமல் காங்கிரஸ் தொண்டராக போரட்டத்தை முன்னெடுத்தேன். மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் நலன்களுக்கு எதிராக செயல்படும் எந்த தலைவரையும் கட்சி தொண்டர்கள் இதேபோன்ற முறையில் நடத்துவார்கள்.” என்று கூறினார்.

இதுகுறித்து அதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், “கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கேள்விப்பட்டேன். இது அவர்களின் இயல்பான எதிர்வினை என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார். கட்சிக்காரரான ப.சிதம்பரம் ஆஜராகியது பற்றிய கேள்விக்கு, “இது ஒரு தொழில்முறை உலகம். அது அந்த நபரைப் பொறுத்தது. யாரும் யாருக்கும் ஆணையிட முடியாது.” என்று விளக்கம் அளித்துள்ளார்.

பொது-தனியார் பங்களிப்புடன் மெட்ரோ டெய்ரி (metro dairy) நிறுவனம் 1991ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதில், அரசு நடத்தும் மேற்கு வங்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு 47 சதவீத பங்குகளையும், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) 10 சதவீத பங்குகளையும், மீதமுள்ள 43 சதவீத பங்குகள் கெவென்டர் நிறுவனத்துக்கும் சொந்தமானதாக இருந்தது. பின்னர், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தனது 10 சதவீத பங்குகளை கெவென்டர் நிறுவனத்துக்கு விற்று விட்டது. 2017 ஆம் ஆண்டில், மீதமுள்ள 47 சதவீத பங்குகளை ஏலத்தில் விற்க மாநில அரசு ஒப்புதல் அளித்தது.

அதன்படி, கெவென்டர் நிறுவனம் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று ரூ.85 கோடிக்கு பங்குகளை வாங்கியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதையடுத்து, கெவென்டர் நிறுவனத்திடன் இந்த பங்குகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததன் மூலம் மாநில அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடர்ந்தார்.

முன்னதாக நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சியை வெல்ல வைக்க அதிர் ரஞ்சன் சவுத்ரியால் முடியவில்லை. அதேசமயம், தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவும் அவர் எதி்ரப்பு தெரிவித்தார் இதனால் கட்சித் தலைமை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த
மம்தா பானர்ஜி
, “வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது அவசியம். இனி காங்கிரஸை நம்பி எந்தப் பலனும் இல்லை. காங்கிரஸ் அதன் செல்வாக்கையும், நம்பகத்தன்மையையும் இழந்து வருகிறது.” என்றார். இதற்கு பதிலளித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன், “மம்தா பானர்ஜி பைத்தியக்காரத்தனமாக பேசி வருகிறார். பைத்தியத்துக்கு எல்லாம் நாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது.” என்றார்.

மேற்குவங்க மாநிலத்தில் அண்மைக்காலமாக வன்முறைகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. திரிணாமூல் – பாஜக – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் என அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.