கொழும்பு:
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால் அதற்கு பொறுப்பேற்று உடனடி யாக அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதிபர் மாளிகை முன்பு கடந்த ஒரு மாதமாக இளைஞர்கள் உள்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இலங்கை அதிபரை எதிர்த்து 10 நாட்களுக்கு முன்பு 1000 தொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள். பிரமாண்ட பேரணியும் நடந்தது.
இந்த நிலையில் அதிபருக்கு எதிராக இலங்கையில் இன்று கடை அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று கொழும்பு, வவுனியா உள்பட அனைத்து நகரங்களிலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன.
இதனால் ரோடுகள் அனைத்தும் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த போராட்டத்துக்கு ஆசிரியர்கள், தபால், வங்கி உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதனால் பள்ளிகள், தபால் அலுவலகங்கள், வங்கிகள் மூடப்பட்டு இருந்தது. வங்கி சேவைகள் முடங்கி போய் உள்ளது.
ரெயில்வே ஊழியர்களும் போராட்டத்தில் குதித்தனர். ஒட்டு மொத்தமாக ஊழியர்கள் பணிக்கு வராததால் ரெயில்வேதுறை ஸ்தம்பித்தது. ரெயில்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
ரெயில்கள் ஓடாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அதிபருக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்றத்தை முற்று கையிடுவதற்காக திரண்டு சென்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். இலங்கையில் அடுத்தடுத்து நடந்து வரும் இந்த போராட்டங்கள் பதட்டத்தை உருவாக்கி உள்ளது.
இதையும் படியுங்கள்…பாம்பு தோலுடன் புரோட்டா பார்சல் வழங்கிய ஓட்டல்- வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி