அதிவேக பந்துவீசி மிரட்டிய உம்ரான் மாலிக்… அவரின் சாதனையை அவரே முறியடிப்பு!

IPL 2022, Umran Malik Tamil News: 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனே மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் நேற்றைய 50வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், டெல்லி அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 207 ரன்களை குவித்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த தொடக்க வீரர் டேவிட் வார்னர் 92 ரன்களும், ரோவ்மேன் பவல் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து விளையாடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி ஐதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதிவேக பந்துவீசி மிரட்டிய உம்ரான் மாலிக்…

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக பந்துகளை வீசி வரும் முதல் வேகப்பந்து வீச்சாளராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உம்ரான் மாலிக் உள்ளார். நேற்றைய ஆட்டத்தில் அவர் வீசிய 20வது ஓவரில் படுவேகமாக பந்துகளை வீசி மிரட்டி வந்தார். அதில் சில பவுண்டரிகளுக்கு விரட்டப்பட்டாலும், சற்றும் சளைக்காமல் அவர் தொடர்ந்து அதே வேகத்தில் வீசினார்.

அதிலும் குறிப்பாக அவர் அதே 20வது ஓவரில் வீசிய 4 வது பந்து பிரமிக்க வைக்கும் வேகத்தில் பிட்ச் ஆகி சென்றது. அதிகபட்சமாக மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தை எதிர்கொண்ட ரோவ்மன் பவல் பவுண்டரிக்கு விரட்டினார். எனினும், இந்த அதிவேக பந்தை உம்ரான் மாலிக் வீசியதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய அவரின் சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

முன்னதாக, மணிக்கு 154 கிலோமீட்டர் வேகத்தில் உம்ரான் மாலிக் வீசிய பந்து தான் அவரின் முந்தைய அதிவேக பந்து சாதனையை இருந்தது. இந்த நிலையில், தற்போது மணிக்கு 157 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி புதிய சாதனை படைத்துள்ளார் .

உம்ரான் மாலிக், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தி இருந்தார். இதில் சுவாரஷ்யம் என்னவென்றால் அந்த ஆட்டத்தில் வீழ்த்தப்பட்ட மொத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 5. இவையனைத்தையுமே உம்ரான் மாலிக் தான் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.