அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளன: சென்னை மேயர் பிரியா

சென்னை: அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளதாகவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரின் ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சி மண்டலம் 10 கோடம்பாக்கத்திற்கு உட்பட்ட 127-வது வார்டு முதல் 142-வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து சென்னை மாநகர மேயர் பிரியா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, வார்டு உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள், தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை, தேவைகளை எடுத்துரைத்தனர். மேலும், புதிதாக தேவைப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்து பேசினர். இதனை கேட்டறிந்த பின்னர், “திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கு செல்லும் போது மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகளை அழைத்துச் செல்ல வேண்டும், மயானங்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும், அம்மா உணவகங்களில் உணவு தரமான முறையில் வழங்கப்பட வேண்டும், இதனை மாமன்ற உறுப்பினர்கள் கண்காணிக்க அதிகாரிகள் முறையாக செய்யப்பட வேண்டும்” என மேயர் அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மேயர் பிரியா, “மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 178 சாலைகள் அமைக்கும் பணி, 58 பூங்காக்கள் மேம்படுத்தும் பணிகள் சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமுதாய நலக்கூடங்களில் தனிநபர்கள் அதிக கட்டணம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அப்படி ஏதேனும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அம்மா உணவகங்களை மக்கள் சரியாக பயன்படுத்துவதில்லை. பல இடங்களில் பூட்டை கூட திறக்காத நிலை உள்ளது. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று அவரின் ஆலோசனைப்படி செயல்படுவோம்” என்றார்.

இதன்பிறகு பேசிய துணை மேயர் மகேஷ்குமார், “அம்மா உணவகம் கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்றாலும் மக்கள் பயன்பெறுவார்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு அம்மா உணவகம் மாதந்தோறும் ஒரு லட்ச ருபாய் நஷ்டத்தில் இயங்குகிறது. இதனை சென்ற ஆட்சியாளர்களின் பெயரினில் நடத்த பெருந்தன்மையாக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.