கன்னியாகுமரி மாவட்டம், பாலபள்ளம் முத்துமாரி அம்மன் கோயில் கும்பாபிஷேக நிகழ்சியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “மஹா சிவராத்திரிக்கு இந்தியா முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் போது, தமிழகத்தில் விடுமுறை அளிக்கபடாதது குறித்து பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கப்படும். தமிழக அரசிடம் கேட்டாலும் பயன் இல்லை. மதுரை ஆதீனம் சங்கபரிவார் இயக்கங்களுக்கு சாமரம் வீசுவதாக நாஞ்சில் சம்பத் கூறியிருப்பதாக சொல்கிறீர்கள். நாஞ்சில் சம்பத் யாருக்கு சாமரம் வீசுகிறார். முதலில் அவர் எந்த கட்சியில் இருந்தார், அடுத்து எங்கே போனார், இப்போது எங்கு இருக்கிறார். நான் இறைவனுக்கு மட்டுமே சாமரம் வீசுவேன். தருமபுரம் ஆதீனத்தை தூக்கிச் செல்வதை தடைசெய்தார்கள். போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கிச் செல்வது, இஸ்லாமியர்கள் அவர்களது சமயம் சார்ந்த சடங்குகளுக்கு பல்லக்கு தூக்குவது இதை பற்றி எல்லாம் அவர் பேசுவாரா.
ஆன்மிகமும் அரசியலும் ஒன்றுதான். கோயிலில் அரசாங்கம்தானே இருக்கிறது. அரசியல்வாதிகள்தானே அறநிலையத்துறை அமைச்சராகிறார்கள். சர்ச், பள்ளிவாசல் போன்றவற்றில் அரசு தலையிடுவது இல்லை. நாம் கோயிலில் தலையிடுவதால் அரசியலும் ஆன்மிகமும் ஒன்றுதான். பிரதமரை சந்திக்க கூடிய நேரம் வரும்போது சந்திப்பேன். இவர்கள் ஓவராக சென்றால் பிரதமரை சந்திக்கவேண்டியதுதான். எனக்கு டெலிபோனில் மிரட்டல் விடுத்தார்கள். கோயிலுக்கு போகிறேன் என்று சொன்னதும், அங்குள்ள மீட்டிங்கில் பேசியவர்கள் ‘ஆதீனம் இங்கு வரமுடியுமா, இங்குள்ள சுவரை கூட தொட விடமாட்டோம், திருப்பணி செய்ய விடமாட்டோம்’ எனக் கூறினார்கள்.
மடத்துப் பிரச்னையை மத பிரச்னையாக ஆக்கினது யார். ஒரு யூடியூப் சேனல் நிகழ்சியில் ஆர்.எம்.வீரப்பாவை பார்த்த நேரத்தில் கோபம் வந்தது. காரணம் திருச்செந்தூர் கும்பாபிஷேகத்தின்போது மடாதிபதிகள் காரில் வரலாமா என பல விதமாக பேசினார். அதற்கும் மேலாக மடாதிபதிகளை நீக்க சட்டம் கொண்டு வர முயன்றார். நீதிமன்ற தலையீட்டால் அது நடக்கவில்லை. அதனால்தான் அந்த நிகழ்ச்சியில் அப்படி பேசினேன். அவரைப்பற்றி பேசியதை சேகர் பாபுவை பேசியதாக மாற்றி கூறினார்கள். அரசியல்வாதி என்னவேண்டுமானாலும். பேசலாம் ஆன்மீகவாதி பேசக்கூடாதா.
பட்டினப் பிரவேசத்திற்கு எதிர்ப்பு இருப்பதால்தான், ஆதரவு அதிகமாக இருக்கிறது. பல்லக்கு சுமக்க எதிர்ப்பு ஏற்பட்டதால் நான் உட்பட தமிழ்நாடே சுமக்க தயாராக உள்ளது. பல்லக்கு சுமக்கும் விஷயத்தில் அமைச்சர் சுமுக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று கூறியிருப்பது நல்லது, பாராட்டத்தக்கது. இதை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். ஆன்மிகத்தில் பிரச்னை என்றால் நான் தொடர்ந்து குரல்கொடுப்பேன்” என்றார்.