திருவனந்தபுரம்:
கேரள மாநிலம், மலப்புரத்தை அடுத்த பெருந்தலமன்னா பகுதியை சேர்ந்தவர் முகமது. (வயது 52). ஆட்டோ டிரைவர்.
முகமதுவின் மனைவி ஜாஸ்மின் (37). இவர்களுக்கு 11 மற்றும் 5 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 4 பேரும் நேற்று மாலை தொண்டிபரம்பு காட்டு பகுதிக்கு ெசன்றனர்.
அங்கு சென்ற சிறிது நேரத்தில் முகமது ஆட்டோவில் இருந்து இறங்கி வெளியே வந்தார். சிறிது நேரத்தில் ஆட்டோ பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் ஆட்டோவின் அருகில் சென்றபோது அங்கு ஜாஸ்மினும்,அவரது மகளும் உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.
5 வயது மகள் மட்டும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
போலீசார் வருவதை அறிந்த முகமது, அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முகமது மனைவி, மகளை கொன்று தற்கொலை செய்தது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.