இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழகம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய மீன்வள சங்கம் சார்பில் 12-வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம், சென்னை எம்ஆர்சி நகரில் நேற்று தொடங்கியது.

இந்த 3 நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று தொடங்கி வைத்தார். இதில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் ஆளுநர் பேசியதாவது:

முந்தைய காலங்களில் ஒவ்வொரு முறையும் ஆட்சி புதிதாக அமையும்போது, புதுப்புது திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நிதி ஒதுக்குவார்கள். அதற்காக ஓர் ஆண்டு செலவிடுவார்கள். ஆனால், ஆட்சியின் 4-ம் ஆண்டு வரும்போது அனைத்தையும் மறந்துவிட்டு தேர்தல் குறித்து யோசிப்பார்கள். மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி, முதலில் இருந்து அதை மீண்டும் தொடங்குவார்கள்.

தற்போது அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும், உலகின் நம்பர் 1 நாடாகமாற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. அதைத்தான் பிரதமர் மோடி ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்று தெரிவிக்கிறார். 150 நாடுகளுக்கு நாம் கரோனா தடுப்பூசிகளை வழங்கி இருக்கிறோம். இதுதான் புதிய இந்தியா. இந்தியாவின் ஆன்மிகத் தலைநகராக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

இவ்வாறு ஆளுநர் பேசினார்.

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘‘மீன்வள ஆதாரங்களை பாதுகாத்தல், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக தமிழக மீன்வளத் துறை செயல்பட்டு வருகிறது. ஆய்வுகள் மூலம் பல தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் மீன்வள பல்கலை. முக்கிய பங்கு வகிக்கிறது’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.