புதுடெல்லி,
இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானிய பகுதிகளில் இருந்து வரும் வான்வழி தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் ஏவுகணைகள் உற்பத்தியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இதில், ஆகாஷ் பிரைம் என்ற பெயரிலான வான்வெளி பாதுகாப்புக்கான புதிய ஏவுகணைகளை இந்திய ராணுவ படை பிரிவில் சேர்ப்பதற்கான முன்மொழிவு மத்திய அரசின் முன் உள்ளது.
இந்த ரக ஏவுகணைகள் எதிரிகளின் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை தாக்கி அழிக்க வல்லவை. தற்போதுள்ள ஆகாஷ் ஏவுகணைகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆகாஷ் பிரைம் ஏவுகணைகள் மிக துல்லியமுடன் செயல்படுவதற்காக மேம்படுத்தப்பட்டு உள்ளதுடன், உள்நாட்டிலேயே தயாரான ரேடியோ அதிர்வெண் சாதனங்களையும் கொண்டுள்ளன.
இதேபோன்று, அதிக உயரத்தில் குறைவான வெப்பநிலை சூழ்நிலைகளிலும் திறம்பட செயல்பட கூடியவை. ஆகாஷ் ஏவுகணையில் உள்ளது போன்ற நவீன அமைப்புகளும் இதில் காணப்படுகின்றன.
இதனால், இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமான படையில் இதனை உபயோகிப்பதற்கான நம்பிக்கையை இவை உயர்த்தி உள்ளன. 4,500 மீட்டர் உயரத்தில் இதனை நிலைநிறுத்த முடியும். இந்த ஏவுகணைகள் 25 முதல் 30 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமுடன் தாக்கி அழிக்கும் திறன் பெற்றவையாகும்.