டெல்லி: உக்ரைன் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என இந்தியாவிற்கு தெரியும் என்று நெதர்லாந்து தூதருக்கு இந்தியா காட்டமான பதில் அளித்திருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் இன்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவிற்கான ஐநா சபையின் நிரந்தர தூதர் திருமூர்த்தி பங்கெடுத்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை திருமூர்த்தி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை சுட்டிக்காட்டி பிரிட்டனுக்கான நெதர்லாந்து தூதர் கரெல் வென், தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தியா ஐ.நா.பொதுச்சபை வாக்கெடுப்பில் பங்கேற்பதை புறக்கணித்திருக்க கூடாது என்றும் ஐ.நா.சாசனத்தை மதியுங்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். கரெல் வென்னின் கருத்துக்கு பதிலடி கொடுத்திருக்கும் ஐ.நா.சபைக்கான இந்தியாவிற்கான நிரந்தர தூதர் திருமூர்த்தி, தயவு செய்து எங்களுக்கு ஆதரவு அளிப்பது போன்று செயல்பட வேண்டாம். எந்த செய்ய வேண்டும் என்று இந்தியாவிற்கு தெரியும் என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார்.