புதுடெல்லி: முஸ்லிம்களின் மசூதிகளின் ‘அஸான்’ எனும் பாங்கு முழக்கத்திற்கான ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இச்சூழலில் ஒரு மசூதியில் ஒலிபெருக்கிகள் பொருத்த உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அப்போது, ஒலிபெருக்கியில் பாங்கு முழங்குவது அடிப்படை உரிமை அல்ல என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
சமீப நாட்களாக, மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மசூதிகளில் தொழுகைக்கானப் பாங்கு முழக்க ஒலிபெருக்கிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுளளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்திலும் பரவிய இந்த விவகாரத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மசூதிகள், கோயில்கள், குருத்துவாராக்கள் உள்ளிட்ட அனைத்து மததலங்களின் ஒலிபெருக்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் ஒலிபெருக்கிகளின் ஓசைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி விதிகளுக்கு முரணாகப் பொருத்தப்பட்ட சில ஆயிரம் ஒலிபெருக்கிகள் மதத்தலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. இதனால், சுமுகமாக முடிந்து வரும் நடவடிக்கைக்கு இடையே, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் பதான்யூவின் நூர் மசூதியின் முத்தவல்லியான மவுல்வி இர்பான் என்பவர் இம்மனுவை அளித்திருந்தார். இம்மனுவில் தம் மசூதியில் பாங்கு முழக்கத்திற்காக ஒலிபெருக்கிகளை பொருத்த அனுமதிக்கும்படி கோரியிருந்தார்.
முன்னதாக மவுல்வி இர்பான், இந்த அனுமதியை தனது தாலுகாவான பிசவுலி துணை ஆட்சியரிடம் கோரியிருந்தார். இதற்கு அவர் அனுமதி அளிக்க மறுக்கவே, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இம்மனு, அலகாபாத் நீதிபதிகளின் அமர்வான நீதிபதி விவேக் குமார் பிர்லா மற்றும் நீதிபதி விகாஸ் பாத்வாரிடம் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு நீதிபதிகள் அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதற்கானக் காரணமாக, ”ஒலிபெருக்கிகளில் பாங்கு முழக்கம் என்பது அடிப்படை உரிமை அல்ல” என நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டுள்ளது. தம் மனுவிற்கு சாதகமாக மவுல்வி இர்பான் தரப்பு முன்வைத்த வாதங்களும் நீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை.