கலிபோர்னியா: எமோஜி ரியாக்ஷன்ஸ், 2 ஜிபி ஃபைல் ஷேரிங், குழுவில் 512 பேர் போன்ற புதிய அம்சங்களை பயனர்களுக்காக ரோல்-அவுட் செய்துள்ளது வாட்ஸ்அப்.
இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகள் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாற்றிக் கொண்டு வருகின்றனர். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது எமோஜி ரியாக்ஷன்ஸ், 2 ஜிபி ஃபைல் ஷேரிங், குழுவில் 512 பேர் போன்ற புதிய அம்சங்களை தங்களது லேட்டஸ்ட் வெர்ஷனில் ரோல்-அவுட் செய்ய தொடங்கியுள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நேற்று அதிகாரபூர்வ பிளாகில் (Blog) தெரிவிக்கப்பட்டது.
இதில், மெசேஜ் ரியாக்ஷன்ஸ் அம்சம் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஓர் அம்சமாகும். ஏனெனில் வாட்ஸ்அப் தவிர்த்து அதன் போட்டி நிறுவனங்களின் தளங்களில் இந்த ரியாக்ஷன்ஸ் அம்சம் இருந்து வருகிறது. இதன் மூலம் ஒரு மெசேஜிற்கு தனியே ரிப்ளை கொடுக்காமல் அதன் கீழே எமோஜிகளின் துணைகொண்டு ரியாக்ட் செய்யலாம். இந்த அம்சத்தை பயனர்கள் பெற வாட்ஸ்அப் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்ய வேண்டும்.
அதேபோல் 2 ஜிபி வரையிலான ஃபைல் ஷேரிங் அம்சம் மற்றும் வாட்ஸ்அப் குழுவில் அதிகபட்சம் 512 நபர்கள் வரையில் சேர்க்கும் அம்சம் மாதிரியானவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.