ஐ.நா சுற்றுச்சூழல் மாநாட்டில் சிறப்புரையாற்றும் சத்குரு… 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

கோவை:
உலகில் உள்ள 195 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் மண் வள பாதுகாப்பு குறித்து ஈஷா நிறுவனர் சத்குரு சிறப்புரையாற்ற உள்ளார்.
UNCCD எனப்படும் ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு COP 15 என்ற பெயரில் நடத்தும் இம்மாநாடு ஐவரி கோஸ்ட் நாட்டில் மே 9 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் முதல் 2 நாட்களில் முக்கிய பேச்சாளராக பங்கேற்கும் சத்குரு, மண் வளத்தை பாதுகாக்க நாடுகளின் தலைவர்கள் கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பேச உள்ளார். 
மண் அழிவை தடுப்பது மற்றும் இழந்த மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச அளவில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இம்மாநாடு வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மண் காப்போம் இயக்கத்திற்காக சத்குரு, 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பா கண்டத்தில் பல்வேறு நாடுகளுக்கு பயணித்த அவர் தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இப்பயணத்தில் அந்தந்த நாடுகளின் தலைவர்கள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், இசை மற்றும் சினிமா பிரபலங்கள் என பல தரப்பினரை சந்தித்து மண் வளப் பாதுகாப்பு குறித்து சத்குரு கலந்துரையாடி வருகிறார்.
ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (UN FAO) ஆய்வின்படி, 2045-ம் ஆண்டிற்குள் உலகில் உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிடும் எனவும், மக்கள் தொகை 900 கோடியை தாண்டிவிடும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால், உலகளவில் உணவு மற்றும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் அதிகரித்து மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இடம்பெயரும் அவலநிலையும், உள்நாட்டு கலவரங்களும் உருவாகும் என எச்சரித்துள்ளது.
சத்குரு மார்ச் 21-ம் தேதி மண் காப்போம் இயக்கத்தை தொடங்கியதில் இருந்து உலகளவில் இவ்வியக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், விஞ்ஞானிகள் மற்றும் ஐ.நா அமைப்புகள் என பலர் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும், 70-க்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரவு அளித்துள்ளன. அதில் சில நாடுகள் இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொண்டுள்ளன.
விவசாய நிலங்களில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிமப் பொருட்கள் கட்டாயம் இருப்பதை அந்தந்த நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதே மண் காப்போம் இயக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.