திருப்பதி: திருப்பதி ஸ்ரீநிவாச மங்காபுரம் அருகே உள்ள ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை மிகவும் பழமையானது. அலிபிரி மலைப்பாதையை விட இப்பாதை வழியாக திருமலைக்கு சென்றால் விரைவாக செல்லலாம். படிகளும் குறைவு. இதனால், இதனை அறிந்த பக்தர்கள் பலர் இப்பாதை வழியாக திருமலைக்கு செல்வது வழக்கம்.
விஜயநகர பேரரசர் ஸ்ரீகிருஷ்ணதேவராயர் உட்பட பல மன்னர்கள், ஆழ்வார்கள் கூட இப்பாதை வழியாகத்தான் திருமலை சென்றடைந்தனர் என கூறப்படுகிறது. ஏழுமலையான் கூட திருமணம் செய்த பின்னர் இவ்வழி மூலமாகவே திருமலைக்கு சென்றார் என புராணங்களிலும், இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற இந்த பாதை, கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதமடைந்தது. இதனால், இப்பாதை மூடப்பட்டது. அதன் பின்னர் மராமத்து பணிகள் நடைபெற்றன.
ரூ.3.60 கோடி செலவில் படிகட்டுகள், தண்ணீர் வசதி, கழிவறைகள் போன்றவை கட்டப்பட்டன. விரைவாக பாதை முழுவதையும் சீர் செய்த தேவஸ்தான பொறியியல் துறையினரை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி வெகுவாக பாராட்டினார். மேலும், நேற்று காலையில் இப்பாதையை அவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதன் வழியாக திரளான பக்தர்கள் திருமலைக்கு நடந்து சென்றனர். அவர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்களும் பழையபடி வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர்கள், சர்வ தரிசன பக்தர்களைவிட சுவாமியை விரைவில் தரிசிக்கலாம்.
10 பேட்டரி கார்கள் காணிக்கை
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தற்போது பக்தர்கள் அதிக அளவில் திருமலைக்கு வருகின்றனர். இதில், முதியோர், நோய் வாய்ப்பட்டவர்களும் சுவாமியை தரிசித்து வருகின்றனர்.
கரோனா பரவல் குறைந்து விட்டதால், திருப்பதி தேவஸ்தானம் தற்போது மூத்த குடிமகன்களுக்கும் சிறப்பு தரிசனத்துக்கான ஏற்பாடுகளை செய்து தருகிது. மூத்த குடிமகன்களுக்காக பேட்டரி கார்கள் கோயில் முகப்பு கோபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கொல்கொத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் சவுத்ரி ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 பேட்டரி கார்களை கோயில் முன் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டியிடம் நேற்று வழங்கினார். பின்னர் அந்த வாகனங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.