கருக்கலைப்புக்குச் சாதகமான அமெரிக்க சட்டங்களை அகற்றி, கருக்கலைப்பை சட்டத்துக்கு எதிரானதாக மாற்ற வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி சாமுவேல் அலிட்டோ 98 பக்க வரைவு கருத்தை வெளிட்டார். இவரது கருத்துக்கு பெண்ணிய வாதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பெண்களும், பிரபலங்களும் கருக்கலைப்பு செய்துகொண்ட அனுபவங்களைப் பகிர்ந்து, இதற்காக வருத்தப்பட தேவையில்லை என தெரிவித்து வருகின்றனர்.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருக்கும் கேத்தி நியூமன் (Cathy Newman), கருக்கலைப்பு செய்து கொண்ட அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், `கருக்கலைப்பு செய்து கொண்டதற்காக ஒரு நிமிடம்கூட வருத்தப்பட்டதில்லை.அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு குறித்து முடிவெடுப்பதற்கான வாய்ப்பு வேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.
அமெரிக்க பாடகரும் பாடலாசிரியருமான Phoebe Bridgers, “கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது கருக்கலைப்பு செய்தேன். கருக்கலைப்பு மாத்திரை எனக்கு எளிதாக இருந்தது. அனைவரும் கருக்கலைப்பு குறித்து இத்தகைய முடிவுகளை எடுக்கத் தகுதியானவர்கள்” என செவ்வாய்க்கிழமையன்று ட்வீட் செய்துள்ளார்.
பெண் உடலை மையமாகவைத்து முன்னெடுக்கப்படும் எவ்வித அரசியலுக்கும் அப்பாற்பட்டு வாழ அமெரிக்க பெண்கள் தொடர்ந்து தங்கள் குரலை உயர்த்தி வருகின்றனர்.