பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பசன கவுடா யத்னால், விஷ்வநாத் உள்ளிட்ட மூத்த பாஜக எம்எல்ஏக்கள் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி ஆகியோரும் கடந்த 9 மாதங்களாக அமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகா வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்சி நிர்வாகிகளிடம் பேசிவிட்டு எந்த முடிவும் எடுக்காமல் டெல்லி திரும்பினார். இதனால் பாஜக எம்எல்ஏக்கள் அதிருப்தி மேலும் அதிகரித்துள்ளது. எனவே வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆகியவை வரும் 11ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “அமைச்சரவை விரிவாக்கம் குறித்து நான் தனியாக முடிவெடுக்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே முடிவெடுப்பார். அவர் எப்போது அழைத்தாலும் டெல்லி செல்ல தயாராக இருக்கிறேன். அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர் முடிவெடுப்பார். வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் அமையும்” என்றார்.