சண்டிகர்: ஹரியாணா மாநிலம் கர்னாலில் பஸ்தாரா என்ற இடத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் சுங்கச்சாவடியில் ஒரு காரை மடக்கி போலீஸார் சோதனையிட்டனர். இதில் காரில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் இருந்த குர்பிரீத் மற்றும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், 3 பெட்டிகளில் இருந்த வெடிபொருட்கள் மற்றும் ரூ.1.3 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது.
கைதானவர்களில் முக்கிய குற்றவாளியான குர்பிரீத் ஏற்கெனவே சிறையில் இருந்தவர். அங்கு அவர் ராஜ்பீர் என்பவரை சந்தித்துள்ளார். ராஜ்பீருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு உள்ளது. குர்பிரீத்தும் அவரது கூட்டாளிகளுக்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிராவின் நான்டெட் மற்றும் தெலங்கானாவின் அடிலாபாத் ஆகிய இடங்களுக்கு வெடிபொருட்களை சப்ளை செய்வதற்காக டெல்லிக்கு சென்றபோது 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்படவர்களை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.