பௌத்த மதத்தை அவமதித்து வேறு மதத்தை ஊக்குவித்து நடந்து கொள்வார்களாக இருந்தால் அவர்களை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
காலிமுகத்திடலில் பௌத்த மதத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றால், பௌத்த பிக்குகள் அவமதிக்கப்படுவார்களாக இருந்தால், தேசிய கீதம் மற்றும் தேசிய கொடி அவமதிக்கப்படுமாக இருந்தால், தமிழீழத்திற்கு பாதை அமைக்கப்படுமாக இருந்தால், பௌத்த மதத்தை அவமதித்து வேறு மதத்தை ஊக்குவித்து நடந்து கொள்வார்களாக இருந்தால், புத்தர் சிலைகளை உடைக்க ஒத்துழைப்பு வழங்குவார்களாக இருந்தால் அவர்களை அந்த இடத்தில் அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்புடையவர்களை அந்த இடத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் கேட்கின்றேன்.
காலிமுகத்திடலில் பதாகையொன்றை ஏந்தியிருக்கும் படமொன்றை பார்த்தேன். நான் ஜெனிவாவில் இருக்கும் போது புலம்பெயர் விடுதலைப் புலிகளுடன் இணைந்து கோப்பி குடித்துக் கொண்டு இறுதியில் முழு சிங்கள இனத்தையும் அவமதித்தார்.
சிங்கள சிப்பாய்கள் கொலைகாரர்கள் என்றும் தாய் நாட்டை டொலர்களுக்காக காட்டிக் கொடுத்தார். அவர் தான் நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். அவ்வாறானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இருக்கின்றனர். அவர்களை அங்கிருந்து அகற்றுமாறு கேட்கின்றேன்.
எங்களை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள். அதனை நாங்கள் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் இதனை பயன்படுத்தி எங்களின் சிங்கள கலாச்சாரத்திற்கும், பௌத்த மதத்திற்கும் தாக்குதல்களை நடத்துவார்களாக இருந்தால் அதனை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.