மலையாளத்தில் வெளியான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழில் கூகுள் குட்டப்பாவக வெளியாகியிருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து நடித்திருக்கும் இந்த சினிமாவை இரட்டை இயக்குநர்கள் சபரி, சரவணன் இயக்கியிருக்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் தந்தையும் மகனுமாக வசிக்கிறார்கள்., கே.எஸ்.ரவிக்குமாரும் பிக்பாஸ் தர்ஷனும். இயற்கையோடு இணைந்து வாழ்வதே ஆயுளை நீட்டிக்கும் என நம்பும் வாழ்க்கை கே.எஸ்.ரவிக்குமாருடையது. ரோபோடிக்ஸ் இன்ஜினியரான தர்ஷன் தனது தந்தையை ஊரிலேயே விட்டுவிட்டு ஜெர்மன் செல்கிறார். அங்கு சென்ற அவர் தனது தந்தைக்கு உதவியாக இருக்க ஒரு ரோபோவை கொண்டு வருகிறார். குட்டப்பா என கிராமத்தாரால் பெயரிடப்பட்ட அந்த ரோபோவை துவக்கத்தில் முதியவரான கே.எஸ்.ரவிகுமார் வெறுத்தாலும் காலப் போக்கில் அதனை தனது சொந்த மகன் போல பாவிக்கிறார். பிறகு நீள்கிறது திரைக்கதை.
அறிவியல் கதைகளை பொறுத்தவரை நமக்கு லாஜிக் எதுவும் தேவையில்லை என்றாலும் சுவாரஸ்யம் முக்கியம். குட்டப்பாவில் அது மொத்தமாகவே மிஸ்ஸிங். கதைக்குள் வரவே ரொம்ப நேரம் ஆகிறது. பிறகு ரோபோ எண்ட்ரி ஆன சிறிது நேரத்தில் இடைவேளை என முதல் பாதி எப்படியோ நகர்கிறது. ஒரு வித்யாசமான கதையினை கையில் வைத்துக் கொண்டு எத்தனை சுவையான காட்சிகளை கொடுக்க முடியும் ஆனால் அதற்கான மெனெக்கெடல் எதுவுமே இல்லை. ஹாலிவுட்டில் குரங்கு ஒரு பெண்ணை காதலிப்பது போலவும். ஒரு ரோபோவை மனிதன் நேசிப்பது போலவும் நிறைய கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் அவை வெற்றிபெற முக்கியக் காரணமே எமோஷனலாக ஒரு கனக்ட்டை உருவாக்குவது. அதனை செய்ய தவறியிருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குநர்கள்.
உதாரணமாக நெஞ்சு வலி வந்து வீட்டு நிலத்தில் மயங்கிக் கிடக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார் அவரை தற்செயலாக பார்க்கும் யோகிபாபு மருத்துவமனையில் சேர்க்கிறார். இந்த சம்பவமே துணையின்றி தனியே இருக்கும் தனது தந்தைக்கு தர்ஷன் ஒரு ரோபோவை கொண்டு வர முக்கிய காரணமாகிறது. இந்த முக்கியக் காட்சியினை half way’யிலா துவங்குவது. தனியே இருக்கும் முதியவர் நெஞ்சு வலியால் துடித்து உதவிக்கு யாரையும் அழைக்க முயன்று தவித்து மயங்குவது போல ஒரு காட்சியினை வைத்திருந்தால் அடுத்தடுத்த காட்சிகள் ஆழமாக செயல்பட்டிருக்கும். இப்படி சின்னச் சின்ன விசயங்களை பல இடங்களில் கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். அருவியின் ஒளிப்பதிவுக்கும் ஜிப்ரானின் இசைக்கும் பாராட்டுகள்.
நடிப்பை பொறுத்தவரை கே.எஸ். ரவிக்குமார் சிறப்பாகவே செய்திருக்கிறார். குட்டப்பாவுடன் ஊர் முழுக்க சுற்றும் காட்சிகள். குட்டப்பாவுக்கு ஆடை தைத்துக் கொடுக்கும் காட்சிகள் எல்லாம் அழகு. ஆனால் தர்ஷன் பிக்பாஸில் நடித்த அளவிற்கு இதில் நடிக்கவில்லை. எக்ஸ்ப்ரசன் சுத்தமாக இல்லை. அவருக்கு ஜோடியாக வரும் லாஸ்லியா ஒரு சம்பிரதாய நாயகியாக வந்து போகிறார் என்றாலும் ரசிக்கலாம். யோகி பாபு, பிளாக் பாண்டி ஆகியோருக்கு கதையில் பெரிய வேலைகள் இல்லை. யோகிபாபு கதாபாத்திரத்தை படம் முழுக்க மட்டம் தட்டிக் கொண்டும் அவமதித்திக் கொண்டும் இருப்பதே நகைச்சுவை என நினைத்திருப்பார்கள் போல. இந்த ஆதிகால பார்முலா வழக்கொழிந்தே பலகாலமாகிவிட்டது. ஒரு பீல் குட் சினிமாவில் தவிர்க்க வேண்டிய விசயங்களில் இந்த வகைமை நகைச்சுவையும் ஒன்று.
கூகுள் குட்டப்பா கொஞ்சம் சின்சியராக மெனெக்கெட்டிருந்தால் அடேயப்பா சொல்ல வைத்திருக்கலாம்.