வடக்கு கொல்கத்தாவில் உள்ள காஷிபூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சித் தலைவரான அர்ஜூன் சௌராசியா (27) என்பவர் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தார். அவர் கோஷ் பாகன் பகுதியில் உள்ள கட்டிடத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸார் அர்ஜூன் சௌராசியாவை கொலை செய்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே, இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று அர்ஜூன் இல்லத்துக்கு செல்கிறார்.
இந்த செய்தியைக் கேட்டதும் அமித் ஷா வருத்தமடைந்ததாக மாநில பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர் திலீப் கேஷ் கூறியதாவது:-
காஷிபூர் தொகுதியில் வசித்து வந்த அர்ஜூன் சவுராசியாவின் மரணம் மற்றும் படுகொலை ஆழ்ந்த துயரத்தை அளிக்கிறது. துரதிருஷ்டவசமான கொலையைக் கருத்தில் கொண்டு, கொல்கத்தாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்கும் அனைத்து கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பாஜக தொண்டர்களை தொந்தரவு செய்வதற்கும், அச்சுறுத்துவதற்கும் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட உத்தி. எங்கள் தொண்டர் அபிஜித் கடந்த ஆண்டு மே 2-ம் தேதி அன்று கொல்லப்பட்டார். அதன் பிறகு 60 கொலைகள் நடந்துள்ளன. யாரும் தண்டிக்கப்படவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்..
பழிவாங்கும் நோக்கத்துடன் பட்டின பிரவேசத்திற்கு தடை- எடப்பாடி பழனிசாமி ஆவேசம்