சென்னை: தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின்மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் 6-ம் தேதி (இன்று) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 7, 8, 9 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயர வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 5-ம் தேதி காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கரூர் மாவட்டம் பால விடுதி, திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட் டம் தேன்கனிக்கோட்டையில் 8, பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் இன்று (மே 6) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். இதன் காரணமாக 6-ம் தேதி அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
7-ம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும், 8, 9-ம் தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண் டாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.