கேரளா மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த நில நாள்களாக கோவை முழுவதும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போத்தனூர், சுந்தராபுரம், குனியமுத்தூர், உக்கடம், ஆர் எஸ் புரம், காந்திபுரம், பீளமேடு, சரவணம்பட்டி,
சிங்காநல்லூர், ஒண்டிபுதூர் ஆகியப் பகுதிகளில் நான்கு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 73 கடைகளில் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில், 57.45 கிலோ பழைய ஷவர்மா பறிமுதல் செய்யப்பட்டது.
அதன் மதிப்பு ரூ.17,480. மேலும், 3 கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. “இந்த சோதனையின்போது பிளாஸ்டிக் பயன்படுத்திய 3 கடைகளுக்கு ரூ.6,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடைகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளோம். இதுகுறித்து தொடர்ந்து சோதனை நடத்துவோம்.” என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.