வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கையை, பல மடங்கு அதிகரித்து காட்டியுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை, பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டு, 47 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை நிராகரிப்பதாக ‘நிடி ஆயோக்’ உறுப்பினர் வி.கே.பால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவா, ‘எய்ம்ஸ்’ இயக்குனர் ரந்தீப் குலேரியா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
கொரோனா இறப்பு குறித்து அந்தந்த நாட்டின் மக்கள் தொகை, பாதிப்பு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட அம்சங்களை கவனிக்காமல், பொதுவான அளவுகோலில் மதிப்பீடு செய்தது தவறு என, அவர்கள் கூறியுள்ளனர். இது பற்றி ரந்தீப் குலேரியா கூறியதாவது:இந்தியாவில் பிறப்பு, இறப்பு தகவல்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் பயன்படுத்தவில்லை. ஊடகச் செய்திகள் மற்றும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் அறிக்கை தயாரித்துள்ளது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement