சுசீந்திரன், விஜய் ஆண்டனி கூட்டணியில் பான் இந்தியா படம்-உண்மை சம்பவத்தை எடுக்கும் படக்குழு

இயக்குநர் சுசீந்திரன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் உருவாகும் புதியப் படத்தை, பான் இந்தியா படமாக எடுக்கவுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் டி.என். தாய் சரவணன் தெரிவித்துள்ளார்.

‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘கே.ஜி.எஃப்.’ உள்ளிட்ட படங்கள் தாய்மொழியையும் தாண்டி, இந்தி மொழி பேசும் ரசிகர்களிடமும் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. குறிப்பாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸில், தென்னிந்தியப் படங்கள் கல்லா கட்டி வருகின்றன. இதனால், தென்னிந்தியப் படங்களுக்கு அண்மைக் காலமாக பாலிவுட்டில் மவுசு கூடியுள்ளது. இதனால் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் பான் இந்தியா படங்களை உருவாக்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

அந்தவகையில், ‘வீரபாண்டியபுரம்’ மற்றும் ‘குற்றம் குற்றமே’ படத்திற்குப் பிறகு இயக்குநர் சுசீந்திரன் புதியப் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், பாரதிராஜா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, தெலுங்கு பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டான ‘ஜதி ரத்னலு’ என்ற படத்தில் நாயகியாக நடித்த ஃபரிதா அப்துல்லா நடிக்கிறார்.

image

மேலும் இந்தப் படத்தில், தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘வள்ளி மயில்’ என்ற பெயரில் உருவாக உள்ள இந்தப் படம், 80-களின் காலக்கட்டத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட உள்ளது. மே 16-ம் தேதி தொடங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல், கோபிச்செட்டிபாளையம், காரைக்குடி, கொடைக்கானல், உதகை மற்றும் கேரளாவின் சில வனப் பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் வசனங்கள் மற்றும் திரைக்கதை பணிகளை மேற்கொள்வதற்காக இயக்குநர் சுசீந்திரன் தற்போது பெரியகுளம் வனப் பகுதிக்கு அருகில் முகாமிட்டுள்ளார். டி. இமான் இசையமைக்க, விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவும், ஆண்டனி படத்தொகுப்பு பணியும் செய்ய உள்ளனர். ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட படங்களை தயாரித்த டி.என். தாய் சரவணன் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.