சென்னை குடியிருப்புவாசிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்! சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்.!

சென்னை மாநகர குடியிருப்பு வாசிகளின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்து வாழ்விட மேம்பாட்டு குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னை மாநகரில் வாழும் நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழலை உருவாக்க ஏற்படுத்தப்பட்டுள்ள சென்னை மாநகர வாழ்விட மேம்பாட்டு குழுவின் முதல் கூட்டம் குழுவின் தலைவர், மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் குழுவின் தலைவர், சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மாநகரில் வாழும் நகர்ப்புற ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கை நிலை, அடிப்படை வசதிகள் மற்றும் சாதகமான சூழ்நிலை உருவாக்கிடவும், மாநகரில் கொள்கை உருவாக்கும் செயல்பாட்டில் ஒருங்கிணைப்பினை மேம்படுத்தவும், அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பினை மேம்படுத்தவும், அடிப்படை வசதிகள் மற்றும் நிலையான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்தவும், இதர அரசு துறைகளுடன் இணைந்து நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு நலத்திட்டங்களை சென்றடைய செய்யவும் மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் சுகாதாரமற்ற பகுதிகளில் வாழும் குடும்பங்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும் சென்னை மாநகர வாழ்விட மேம்பாட்டு குழு உருவாக்கப்பட்டுள்ளது.  

இக்குழுவில் தலைவராக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அவர்களும், துணைத் தலைவராக பெருநகர சென்னை காவல் துறை ஆணையர் அவர்களும், உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் அவர்களும், உறுப்பினர்களாக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் திட்ட இயக்குநர், மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறையின் சுகாதார இணை இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர், மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குநர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் பிரதிநிதி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநரால் தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வ சேவை அமைப்பு/தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் 2 பிரதிநிதிகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்களின் 2 பிரதிநிதிகள், இந்திய செஞ்சிலுவை சங்கத் தலைவர் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மண்டல வாரியான பிரதிநிதிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சிறப்பு முயற்சியாக வாரிய கோட்டங்களின் எல்லைகள் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல எல்லைகளுக்கு இணங்க மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் இதர நகரங்களில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட குடியிருப்புகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை முழுமைப்படுத்தி வர்ணம் பூசி தோற்றப் பொலிவினை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.  

முதற்கட்டமாக 26,483 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.68.72 கோடி செலவில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் , கூடுதலாக 40,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.100 கோடி செலவில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

சென்னை மாநகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு திட்டப்பகுதிகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நன்முறையில் பராமரிக்க “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” எனும் புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது.  

“நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் குடியிருப்போர் நலச்சங்கங்கள் குடியிருப்புகளை பராமரிக்க ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். குடியிருப்போர் நலச்சங்கள் பதிவு செய்வதை ஊக்குவிக்க பதிவு கட்டணத்திற்கு விலக்களிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடியிருப்போர் நலச்சங்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் பராமரிப்பு பணிகளை ஊக்குவிக்க தொடக்கமாக மூன்று மாத பராமரிப்பு தொகை அரசு பங்கேற்பு தொகையில் முன்பணமாக வழங்கப்படும் போன்ற புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.  

அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதியில் உள்ள குப்பைகளை அன்றாடம் அகற்றுதல், தெரு மின்விளக்குளை பராமரித்தல், குடிநீர் சீராக வழங்குதல், கழிவுநீரை வெளியேற்றி பராமரித்தல், மின்சார பகிர்மான பெட்டிகளை முறையாக பராமரித்தல், மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்தல், சுயஉதவி குழு உருவாக்குதல், திறன் பயிற்சிகள் அளித்தல், வங்கி கடன் வழங்குதல், மருத்துவ வசதினை மேம்படுத்துதல், கல்வி கற்க உரிய சூழலை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பு உருவாக்கி தருதல் போன்ற பொது கோரிக்கைகள் அனைத்து துறையினருடன் ஒருங்கிணைந்து நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.   

இக்கூட்டத்தில் மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், குழுவின் துணைத் தலைவர்/பெருநகர சென்னை காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப., குழுவின் உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்/தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற சேவை துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்துக் கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.