தூத்துக்குடி அடுத்த கோவில்பட்டி ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் ஊழியர்களால் இல்லாததால் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலில் கோவில்பட்டி, கயத்தாறு உள்ளிட்ட 5 பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், காலையில் இருந்தே காத்திருந்த பயணிகளுக்கு ஊழியர் ஒருவர் டிக்கெட் வழங்கி வந்த நிலையில், அவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றதாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து, காத்திருந்த பயணிகளுக்கு மாலை 6 மணியளவில் வந்த ஊழியர் டிக்கெட் வழங்கிய நிலையில், பயணிகள் முந்தியடித்து டிக்கெட் எடுக்க முற்பட்டனர்.
கடைசி நேரத்தில் டிக்கெட் வழங்கப்பட்டதால், பயணிகள் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே ரயில் சென்றுவிட்டது.
தொடர்ந்து, சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நடைமேடை 1-ல் வந்த நிலையில், பயணிகள் கூட்டமாக டிக்கெட் எடுக்க முற்பட்டதால், ரயில் நிலைய வளாகமே பரபரப்பு நிலவியது.