டுவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக சிஇஓ-வாக விரைவில் பொறுப்பேற்கும் எலான் மஸ்க் ?

நியூயார்க்,
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் டுவிட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம்  செய்தார்.

அதை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார். டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.
டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அது குறித்து பல தகவல்களை எலான் மஸ்க் வெளியிட்டு வந்தார். இது தொடர்பாக அவர் சமீபத்தில் “சாதாரண பயனர்கள் தொடர்ந்து எப்போதும் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக மற்றும் அரசாங்க பயனர்களுக்கு சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் ” என பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டுவிட்டரை வாங்குவதற்கான முழுத்தொகையை செலுத்திய பின் எலான் மஸ்க் பொறுப்பேற்க உள்ளதாகவும் விற்பனை முடியும் வரை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பராக் அகர்வால் தொடர்வார்  என்றும்  எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டார். இவர் இந்தியாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.