வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புது டில்லி: விர்ச்சுவல் பிரைவட் நெட்வொர்க் எனப்படும் வி.பி.என்., சேவை வழங்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதனைப் பயன்படுத்துபவர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வி.பி.என்., மூலமாக ஒருவர் தங்கள் இருப்பிடத்தை மறைத்து, முந்தைய தேடல் தகவல்களையும் இணைய சேவை வழங்குபவருக்கு தெரிவிக்காமல் இணையத்தில் உலவ முடியும். தங்கள் நாடுகளில் தடைசெய்யப்பட்ட இணையதளங்களை அணுகுவதற்கு இந்த வசதியை பலரும் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட கேம்களை விளையாடுவதற்கு, ஆபாச படங்கள் பார்ப்பதற்கு இவற்றை பெரிதும் உபயோகிக்கின்றனர். பயங்கரவாத செயல்களுக்கும் இதனை பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்புக்கான சி.இ.ஆர்.டி., அமைப்பு புதிய உத்தரவுகளை வி.பி.என்., நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி இனி வி.பி.என்., பயனர்களின் தகவல்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைத்திருக்க வேண்டும்.
அதே போல் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனங்களும் பயனர்களின் பரிவர்த்தனை விவரங்களை 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க வேண்டும். ஜூன் இறுதியிலிருந்து இவ்வுத்தரவுகள் நடைமுறைக்கு வர உள்ளன. இதனை செயல்படுத்தாத நிறுவனங்கள் ஐ.டி., சட்டப்படி ஓராண்டு வரை சிறை தண்டனை பெற வாய்ப்பு உண்டு.
Advertisement