மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தூய்மைப் பணிகள் நாள்தோறும் தவறாமல் நடைபெறுவதையும், குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படுவதையும் கண்காணிக்க வேண்டும் என சென்னை மாநகர மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுடனான ஆய்வுக்கூட்டம் மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட வார்டுகள் 127 முதல் 142 வரை உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகள், சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், பூங்காப் பணிகள், நமக்கு நாமே திட்டப் பணிகள், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். இந்தப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் அவர்கள் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் மேயர் அவர்கள் தெரிவித்ததாவது;
கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மாமன்ற உறுப்பினர்கள் அந்தந்த வார்டு உதவி/இளநிலைப் பொறியாளர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திடவும், மழைநீர் வடிகால் அமைக்க தேவையுள்ள இடங்களைக் கண்டறிந்து புதிய மழைநீர் வடிகால்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சியின் பூங்காக்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும், சரியான நேரத்தில் திறக்கப்பட்டு மூடப்படுகிறதா எனவும் அவ்வப்பொழுது கண்காணித்து அலுவலர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.
சுடுகாடு மற்றும் இடுகாடுகளில் உடல்களை அடக்கம் மற்றும் தகனம் செய்வது பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய பொறியாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் சம்பந்தப்பட்ட பணிகளில் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீர்த்தேக்கப் பகுதிகள் மற்றும் நீர்நிலைகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்கும் வகையில் மலேரியா பணியாளர்கள் மூலம் முறையாக கொசு மருந்து தெளிக்கப்படுகிறதா என்பதை மாமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்யலாம்.
மேலும், கொசுமருந்து தெளிக்கப்படும் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மாமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், மாநகராட்சியின் சமூக நலக்கூடங்களில் முறையான கட்டணம் வசூலிக்கப்படுவதை மாமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் தூய்மைப் பணிகள் நாள்தோறும் தவறாமல் நடைபெறுவதையும், குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படுவதையும் கண்காணிக்க வேண்டும்.
மேலும், தங்கள் பகுதிகளில் அனைத்து தெரு விளக்குகளும் சரியான முறையில் எரிவதை உறுதி செய்து, தேவைப்படும் இடங்களில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, சென்னை மாநகரின் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் செடிகள் நடவு செய்யவும், போக்குவரத்து மையத் தடுப்புகளில் செடிகள் நட்டு பசுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் வரும் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 3300 இடங்களில் சிறப்பாக நடத்திடவும், கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை செலுத்த வேண்டிய நபர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து அனைவரும் கோவிட் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மண்டலக் குழுத் தலைவரின் வாயிலாக தகவல் தெரிவித்தால், அதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு தகுந்த விதிமுறைகளுக்குட்பட்டு நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.எம்.வி.பிரபாகர ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.