ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் கோர்ட்டில் சமர்பிப்பதற்காக போலீசார் சேகரித்து வைத்திருந்த தடயங்களை குரங்கு எடுத்து சென்ற விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள சந்த்வாஜி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சஷிகாந்த் சர்மா என்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இவரது மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி அவரது குடும்பத்தினர் டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை மறித்து முற்றுகையிட்டுள்ளனர்.
போராட்டம் நடைபெற்ற ஐந்து நாட்களுக்குப் பிறகு ராகுல் மற்றும் மோகன்லால் கண்டேரா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். இருவரும் சந்த்வாஜியில் பகுதியை சேர்ந்தவர்கள்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் கோர்ட்டில் பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையில் கொலைக் குற்றத்திற்கான தடயங்களை சமர்பிக்க போலீசாரை கோர்ட்டு கோரியுள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் போலீசார் கோர்ட்டில் அளித்த பதிலை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதாவது இந்த கொலையில் தொடர்புடைய கத்தி உள்ளிட்ட 15 தடயங்கள் கொண்ட பையை போலீசார் காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள மரத்தடியில் ஒருமுறை வைத்திருந்ததாகவும் ஆனால் அந்த பையை குரங்கு ஒன்று எடுத்துச் சென்று ஓடிவிட்டதாகவும் எழுத்துப் பூர்வமாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் இந்த பதிலை கேட்டு ஆத்திரமடைந்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதற்கு பதிலளித்த காவல்துறை, சம்பந்தப்பட்ட போலீஸ் ஓய்வு பெற்ற சில வருடங்களில் உயிர் இழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.