சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த 3,262 மையங்களில் 8.3 லட்சம் பேர் எழுதினர். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை புழல், மதுரை உள்ளிட்ட 9 சிறைகளில் அமைக்கப்பட்ட மையங்களில் 63 கைதிகள் தேர்வு எழுதினர்.
சென்னை சாந்தோமில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
ஜூலையில் தேர்வு முடிவு
ஜூலை மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து தமிழகம் வரும் தமிழர்களின் குழந்தைகளுக்கான கல்வி தொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். முதல்நாளான நேற்று மொழிப்பாடத் தேர்வு நடந்தது. 90 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இத்தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஒரு மதிப்பெண் கேள்விகள் தவிர மற்ற பகுதிகள் எளிதாக பதில் அளிக்கும் விதத்தில் இருந்ததாகவும், சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் எனவும் ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 9-ம் தேதி ஆங்கிலப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. இதனிடையே 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று (மே 6) தொடங்குகிறது. முதல்நாளில் மொழிப் பாடத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 4,092 மையங்களில் 9.93 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.