முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்புக்கு வந்து ஒரு ஆண்டை முழுமையாக மே 7-ம் தேதி நிறைவு செய்ய உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு திமுக தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டைக் கைப்பற்றியதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும் நிலவியது.
அதை மேலும் அதிகரிக்கும் விதமாக முதல்வர் பதவியேற்பு விழாவில், ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என உறுதி மொழி ஏற்கும் போது ஸ்டாலின் உச்சரித்தது மிகப்பெரிய பேசுபொருள் ஆனது. அதன் பிறகு கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழகத்தை எப்படி மீட்பது என்பதில் அரசு முழு கவனத்தையும் செலுத்தியது.
இப்போது திமுக ஆட்சியமைத்து ஓராண்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், பொருளாதாரம், கல்வி, பெண்கள் அதிகாரம் உள்ளிட்டவற்றில் செய்த சாதனை என்ன என்பதை விளக்கமாகப் பார்க்கலாம்.
இது ரொம்ப லேட்டு.. ரிசர்வ் வங்கி செய்தது பெரும் தவறு..?!
கொரோனா 2-ம் அலை
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வரும்போது கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்தது. தினம் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்புகள் பதிவானது. அதை ஒரு பக்கம் சமாளித்துக்கொண்டு மக்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக 4 ஆயிரம் ரூபாயை இரண்டு தவணையாக வழங்கியது.
பால் விலை குறைப்பு
தொடர்ந்து ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்தது. அதனால் ஆவின் பால் தினமும் கூடுதலாக 1.50 லட்சம் லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெள்ளை அறிக்கை
தமிழ்நாட்டின் நிதி நிலையை விளக்கும் விதமாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வாசித்தார். அதில் தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெளிப்படைத்தன்மையை வழங்கியது. கடந்த 3 தலைமை ஆட்சியின் பொருளாதார சூழ்நிலை மட்டுமல்லாமல் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிர்வாகம் போன்ற முக்கிய பொதுத்துறை நிறுவனங்களின் நிலை குறித்த ஆய்வறிக்கையாகவும் அது இருந்தது.
பெட்ரோல் விலை குறைப்பு
தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் விலையைக் குறைப்போம் என உறுதி செய்ததை போல, 3 ரூபாய் வரை வாட் வரியைக் குறைத்து அறிவித்தனர். இன்னும் கூடுதலாக குறைக்க வெண்டும். டீசல் விலையை இன்னும் ஏன் குறைக்கவில்லை என்பது கேள்வியாக உள்ளது.
பொருளாதார ஆலோசனைக் குழு
முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டுஃப்லோ தலைமையில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், வளர்ச்சிப் பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ் மற்றும் முன்னாள் மத்திய நிதிச் செயலாளர் எஸ் நாராயண் உள்ளிட்டோர் கொண்ட 5 பேர் குழுவை உருவாக்கினர்.
இந்தக் குழு தமிழ்நாட்டின் நிதி நிலையைச் சீர் செய்து வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவும் முதலீடுகளை ஈர்க்கவும், சமூக பொருளாதார நடவடிக்கைகளை எடுக்கவும், புதிய சமூக பாதுகாப்பு திட்டங்களை கொண்டு வரவும் ஆலோசனை வழங்கி வருகிறது.
விவசாயத்துக்குத் தனி பட்ஜெட்
நீண்ட நாட்களாக விவசாயத்துக்கு எனத் தனி பட்ஜெட் வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்த நிலையில், அதற்கான தனி பட்ஜெட்டும் சென்ற இரண்டு பட்ஜெட் கூட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டது.
பொருளாதாரம்
மார்ச் 18-ம் தேதி தனது முதல் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், அது இப்போது மீண்டு வருகிறது. அரசாங்கம் அதன் முன்னுரிமைகளை மறுசீரமைத்து, நலத் திட்டங்களில் சமரசம் செய்யாமல், சமூக உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த உள்ளது என கூறியிருந்தார்.
மேலும் தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையையும் 58,692.68 கோடியிலிருந்து 55,272.79 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளதாக அறிவித்தார்.
நீட்
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு நீட்-ஐ திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால், சட்ட சபையில் சட்டம் ஏற்றி நீக்கப்படும் என கூறியிருந்தனர். இப்போது அதற்கான சட்டம் இயற்றப்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி கட்டமைப்பு
கொரோனா காலத்தில் 2 வருடங்களுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் சரி வர இயங்காத நிலையில் அவற்றை பலப்படுத்த 36,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பல மாணவர்கள் பள்ளி படிப்பை நிறுத்திய நிலையில் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு அமல்படுத்திச் செயல்படுத்தி வருகிறது.
பெண்களுக்குப் பேருந்து கட்டணம் இலவசம்
தமிழ்நாட்டில் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்களில் 60 சதவீதத்தினர் பெண்கள். இவர்கள் உள்ளூர் அரசு பேருந்துகளில் கட்டணம் ஏதும் இல்லாமல் சென்று வரும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். அதனால் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் 200 ரூபாய் முதல் 1000 ரூபாய் சேமிப்பு கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
ரேஷன் கார்டு
கணவனை இழந்த அல்லது பிற குடும்ப, சமூக காரணங்களுக்காகத் தனியாக உள்ள பெண்களுக்கும் ரேஷன் கார்டு வழங்கி வருகின்றனர். முன்பு குறைந்தது 2 அல்லது 3 பேர் குடும்பமாக இருப்பவர்களுக்கு மட்டும்தான் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வந்தது. அதனால் தனியாக உள்ள பெண்களின் நிலை மேம்படும்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் மூலம் பெண்களுக்கு நிதியுதவி வழங்கி வந்த திட்டத்தை மாற்றி மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமாக அறிவித்தனர்.
இதனால், பெண்களுக்குத் திருமணத்தை விட கல்வி தான் முக்கியம். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்குக் கல்லூரி சென்று உயர் கல்வி படிக்க ஒவ்வொரு மாதமும் 1000 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்தனர். இந்த திட்டத்தினால் பெண்கள் படித்து வேலைக்குச் சென்றால் எவ்வளவு நகை தனது திருமணத்துக்கு வேண்டும் என்பதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள் என கூறுகின்றனர். ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் வரை இந்த திட்டம் கீழ் பயன்பெறுவார்கள். கல்லூரி மட்டுமல்லாமல், டிப்ளோமா, ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
One year of DMK govt. What is the record in economy, education and women’s empowerment
One year since the DMK came to power. What is the record in economy, education and women’s empowerment | திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவு.. பொருளாதாரம், கல்வி, பெண்கள் அதிகாரம்.. செய்த சாதனை என்ன?