நெல்லையில் ஒரே நேரத்தில் சிறுவன் உட்பட 10-க்கும் மேற்பட்டோரை வெறி நாய் கடித்துக் குதறியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லை டவுன் காட்சி மண்டபம், மாதா தெரு, கோடீஸ்வரன் நகர் ஆகிய பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய் ஒன்று நேற்றிரவு திடீரென பொதுமக்கள் சிலரை விரட்டி விரட்டி கடித்துள்ளது இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் அச்சத்தில் ஓடியுள்ளனர். இதையடுத்து அந்த நாய் சிறுவன் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை கடித்துக் குதறியது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதற்கிடையில் அந்த நாய் தப்பி ஓடியதால் பொதுமக்கள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர். எனவே உடனடியாக நாயை பிடிக்க வேண்டுமென்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் உத்தரவின்பேரில் வன மருத்துவர் அடங்கிய இரண்டு குழுக்கள் மயக்க ஊசி செலுத்தி நாயை பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இருப்பினும் தற்போது வரை நாய் பிடிபடவில்லை ஏற்கனவே நெல்லை மாநகராட்சி பகுதியில் நாய் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், 10-க்கும் மேற்பட்டோரை நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM