அலாஸ்கா,
நிலவின் மேற்பரப்பில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் பற்றிய ஆய்வுக்கு இந்தியாவின் சந்திரயான் விண்கல திட்டம் உதவியது. இந்த திட்டத்தின்படி, கடந்த 2008ம் ஆண்டில் நிலவின் நீர் இருப்பு கண்டறியப்பட்டது சாதனையாக இருந்தது.
இதன்பின்பு நிலவுக்கு அடுத்தடுத்து விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்யும் இந்தியாவின் முயற்சி தொடர்ந்து வருகிறது. எனினும், சந்திரயான்-2 திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அந்த திட்டத்தில் நிலவின் மறுபக்கம் பற்றி ஆராய சென்ற விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு, தோல்வி ஏற்பட்டது. எனினும், சந்திரயான்-3 திட்ட செயல்பாட்டிற்கான பணிகளில் இஸ்ரோ தீவிரமுடன் செயல்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, நிலவில் நீர் இருப்புக்கான தகவல் கண்டறியப்பட்ட பின்னர், அது எங்கிருந்து வந்திருக்க கூடும் என்ற கேள்வி எழுந்தது. காற்று வீசாத நிலவில் உள்ள நீரானது, பூமியில் இருந்தே கிடைத்துள்ளது என ஆய்வாளர்கள் சமீபத்திய ஆய்வு முடிவின்படி தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி அலாஸ்கா பல்கலை கழகத்தின் பேராசிரியர் கந்தர் கிளெதெத்ஸ்கா தலைமையிலான விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், புவியின் மேல்-வளிமண்டலத்தில் இருந்து ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அயனிகள் தப்பி சென்றதன் விளைவாக நிலவில் நீர் சேர்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிலவின் மேற்பரப்பில் கட்டிடங்களை எழுப்பி, பின்னர் செவ்வாய்க்கு பயணம் செய்வதற்கு திட்டமிட்டு உள்ளன. நிலவின் தென்முனையில் முகாம் ஒன்றை கட்ட நாசாவின் ஆர்டிமிஸ் குழு திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில், இந்த கண்டுபிடிப்பு தெரிய வந்துள்ளது.
இதன்படி, புவியில் இருந்து தப்பி சென்ற அயனிகளில் இருந்து உருவான திரவ வடிவிலான நீரானது 3,500 கன கிலோ மீட்டர் பரப்பளவில் உறைந்த நிலையில் நிலவில் படிந்திருக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த கண்டுபிடிப்பினால், வருங்காலத்தில் நிலவில் தரையிறங்குவது மற்றும் உயிரிகளின் வாழ்விடங்கள் ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்கு ஆற்றல்மிக்க மூலங்களாக அவை செயல்படும்.
இந்த நீர் உறைதலுக்கு நிலவின் செயல்பாடும் ஒரு காரணம் என தெரிய வந்துள்ளது. அது எப்படி என்றால், நிலவானது பூமியை சுற்றி வருகிறது. புவியில் காந்த புலம் உள்ளது. இந்த காந்த புலம் ஆனது, சூரியனில் இருந்து தொடர்ச்சியாக வெளிவரும் அதிகப்படியான துகள்களில் இருந்து புவியை பாதுகாக்கும் அரண் போன்று செயல்படுகிறது.
இந்த காந்தபுலம் நிறைந்த பகுதிகள் காந்தமண்டலம் என அழைக்கப்படுகிறது. பூமியை சுற்றி வரும் நிலவு ஒரு மாதத்தில் 5 நாட்கள் இந்த காந்தமண்டல பகுதிக்கு வருகிறது. மேக்னெட்டோடெயில் எனப்படும் காந்தமண்டல வால் பகுதியில் நிலவு பயணிக்கும்போது, புவியின் காந்தபுல கோடுகளில் தற்காலிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்த கோடுகள் உடைந்து விண்வெளியில் பல ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு சென்று பின்னர் காணாமலும் போகும்.
ஆனால், காந்தமண்டல வால் பகுதியில் நிலவு பயணிக்கும்போது, உடைந்த சில கோடுகளை எதிர்ப்புறத்தில் உள்ள கோடுகளுடன் இணைப்பதற்கான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படி நிகழும்போது, பூமியில் இருந்து தப்பி சென்ற ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் அயனிகள், மீண்டும் இணைந்த காந்தபுல கோடுகளை நோக்கி வேகமுடன் செல்கிறது.
தொடர்ந்து அவை பூமிக்கு திரும்புகின்றன. இப்படி செல்லும் அயனிகள் நிலவின் மீதும் மோதுகின்றன. இந்த மோதலுக்கு பின்னர் நிலவின் மேல்பகுதியில் நிரந்தர, உறைந்த அடுக்குகள் ஏற்படுகின்றன.
இந்த அடுக்குகளில் மண், துகள், மணல் மற்றும் பனி ஆகியவை காணப்படும். இதனை பற்றி கிளெதெத்ஸ்கா கூறும்போது, நிலவில் மழை பொழிவது போன்று, பூமிக்கு திரும்பும் இந்த நீர் அயனிகள் நிலவின் மேற்பரப்பில் விழுகின்றன என கூறுகிறார்.
இந்த புதிய கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் நிலவின் நிரந்தர உறைபனி மண்டலங்களில் ஆய்வு செய்வதற்கு வழிவகுக்கும். அதிக அளவிலான நீர் இருப்பு பற்றி அறிந்து கொள்ள உதவும்.
இதனால், காற்று இல்லாத நிலவின் மேற்பரப்பில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியப்படுதலுக்கு தேவையான அதிகப்படியான நீர் இருப்பு பற்றிய விவரங்களும் வெளிவருவதற்கு இந்த ஆய்வு முடிவு வழி ஏற்படுத்தும்.