மத்திய பிரதேச மாநிலத்தில் தள்ளு வண்டியில் காய்கறி விற்கும் நபர் ஒருவரின் மகள் சிவில் நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இது அந்தப் பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் அங்கிதா நாகர். 29 வயதான இவர் ஏற்கனவே 3 முறை சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெறாத நிலையில் தொடர்ந்து மனம் தளராமல் தற்போது நான்காவது முறையாக தேர்வில் பங்கேற்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்தூரின் முசாகேத்தி என்னும் பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் அசோக் நாகர் பொருளாதார ரீதியாக பல கஷ்டங்கள் வந்தபோதிலும் தனது மகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் நிலையாக இருந்ததாக அசோக் கூறுகிறார்.
சட்டத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பை முடித்து இருக்கும் அங்கிதா, சிறுவயது முதலே நீதிபதி ஆக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்தார். கல்லூரி சென்று வந்த பிறகு தந்தையுடன் சேர்ந்து காய்கறி வியாபாரத்தில் ஈடுபடுவாராம் அங்கிதா.
தற்போது சிவில் நீதிபதி Class-II தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார் இவர்.
இதுகுறித்து பேசிய அவர் “இதுவரை 3 முறை தேர்வில் தோல்வியடைந்த போதிலும் நான் என்னுடைய கனவுகளை விட்டுத்தர தயாராக இல்லை. சொல்லப்போனால் இந்த தடைகள் தான் எனக்கான கதவுகளைத் திறந்து இருக்கின்றன. நான் தொடர்ந்து முன்னேறிச் செல்வேன்” என்கிறார் பெருமையாக.கல்வி மட்டுமே நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதை மத்திய பிரதேசத்தை சேர்ந்த அங்கிதா மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
தன்னுடைய மகளின் வெற்றி தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறும் அசோக்,” பெண் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். அவர்களது விருப்பத்திற்கு மீறி திருமணம் செய்துவைக்க கூடாது. பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கவேண்டும்” என்றார்.
தந்தை தள்ளுவண்டியில் காய்கறி விற்றுவரும் நிலையில், கஷ்டப்பட்டு படித்து நீதிபதியாக உயர இருக்கும் அங்கிதா நாகருக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.