பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணியை ஓராண்டில் செய்து முடித்த மின்னல் அரசு என திமுக அரசை வைகோ பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எங்கள் திருநாட்டில், எங்கள் நல் ஆட்சியே பொங்கிடுக வாய்மை பொலிந்திடும் என்றே நீ செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே” என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் எண்ணம், தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி மீண்டும் ஈடேறியது.
அந்த நாளில், நீதிக்கட்சியின் நீட்சியாய், தி.மு.கழக அரசின் தொடர்ச்சியாய், முதல்வர் பொறுப்பு ஏற்றபோது, “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்று அவர் தொடங்கிய உறுதிமொழியின் வீர முழக்கம், தமிழர் செவிகளில் இன்றும் கம்பீரமாக ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
பத்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை ஓராண்டு முடிவதற்கு உள்ளாகவே முனைந்து நின்று நிறைவேற்றிய, ஓய்வு அறியா உழைப்பாளியாம், நம் முதல்வரின் செயல் திறனை நாடும் ஏடும், நல்லவர்களும், உச்நீதிமன்றத் தலைமை நீதிபதியும் பாராட்டிப் புகழ்மாலை சூடி இருப்பது, திராவிட இயக்கத்திற்குப் பெருமை சேர்க்கின்றது.
கோட்டையில் அடி எடுத்து வைத்போது, கொரோனா எனும் கொடுந்தொற்று புயலாய்த் தாக்கியது. மின்னல் வேக நடவடிக்கைகளை மேற்கொண்டு, 91 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பு ஊசி செலுத்தி, அச்சசத்தின் பிடியில் இருந்து மக்களை விடுவித்தது தமிழ்நாடு அரசு!
கொரானாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு உதவித் தொகை, இடை நின்ற குழந்தைகள் மீண்டும் கல்வி தொடர முயற்சி, பொது முடக்கக் காலத்திலும் கற்றல் இழப்பை ஈடுகட்ட. ‘இல்லம் தேடி கல்வி’ எனும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல் என மக்கள் நல அரசாக முழு வீச்சாகக் களத்தில் இறங்கி செயல்பட்டது தமிழ்நாடு அரசு!
‘மக்களைத் தேடி மருத்துவம்’ என அறிவித்து, மருத்துவச் சேவையை மக்கள் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் திட்டம்; சாலை விபத்துகளில் சிக்கியோரைக் காக்க, ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ என்ற மனிதநேய திட்டம்; மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டுத் தீர்த்து வைக்கும் ‘நான் முதல்வன்’, ‘முதல்வரின் முகவரி’ எனும் திட்டங்களைச் செயல்படுத்தி, இந்தியாவிற்கே வழிகாட்டுகின்றது, நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்களின் ‘திராவிட மாடல்’ அரசு.
தந்தை பெரியாரின் பிறந்தநாள் ‘சமூக நீதி நாள்’, டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள், ‘சமத்துவ நாள்’ என அறிவித்து, சமத்துவ – சமூகநீதி உறுதிமொழிகளை ஏற்கச் செய்தது, வேறுபாடுகள் இன்றி அர்ச்சகர் பணியில் அனைவரும் நியமனம், ஆலயங்களில் தமிழில் வழிபாடு, தனியாரின் ஆக்கிரமிப்புகளில் இருந்த இந்து அறநிலையத்துறையின் சொத்துகளை மீட்டது ஆகிய நற்பணிகளைப் பாராட்டி, இந்த அரசு ஆன்மீக அரசு என சைவ மடங்களின் துறவிகளே பாராட்டும் நல்ல சூழ்நிலையை உருவாக்கியது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாட்டில் அரசு பணி இடங்களில் தமிழர்களுக்குத்தான் வாய்ப்பு, அவர்களுக்கு தமிழ் மொழி அறிவு கட்டாயம், அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தாளில் தேர்ச்சி பெறல் வேண்டும். அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பம் இட வேண்டும், கோப்புகள், அரசு செயல்பாடுகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இடம்பெற வேண்டும் என்பன போன்ற அறிவிப்புகளால் தமிழுக்கும், தமிழர்க்கும் உரிய இடம் தந்து சிறப்பு செய்து வருகிறது கலைஞரின் வழி நிற்கும் தமிழ்நாடு அரசு.
‘ஈழத்தமிழர்கள் அகதிகள் அல்ல’ என்று அறிவித்து, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்ற புதிய பெயரினைச் சூட்டி, 317 கோடி ரூபாய் மதிப்பிலான சமூக நலத் திட்டங்களை அவர்களுக்காக ஒதுக்கி, அவர்கள் நலனை மேம்படுத்த 13 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவினையும் அமைத்தது தளபதி ஸ்டாலின் அவர்களின் அரசு.
தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இலங்கை மக்களுக்காக 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், உயிர் காக்கும் மருந்துகள் இவைகளோடு தி.மு.கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்து இருக்கின்றது தமிழ்நாடு அரசு.
அனைவருக்கும் அனைத்தும் என்ற திராவிட இயக்க இலட்சியங்களை நிறைவேற்றும் அரசாக, தமிழ்நாடு அரசு கடந்த ஓராண்டில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.
இந்தச் சாதனைச் சரிதம் தொடரவும், அனைத்துத் துறைகளிலும் திராவிட இயக்கக் கொள்கைகள் நிறைவேற்றிடவும் மின்னல் வேகத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்ற தளபதி ஸ்டாலின் அரசுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.